Monday, May 9, 2011

2. எம்பெருமானை அடைய ஆழ்வாரின் ப்ரார்த்தனைகள்

2.1 நான் கெட்டுத்திரிகின்றேனே. என்னைக்காப்பாத்து

1. பரமனே, இவ்வுலகில் என்னுடைய ஆசைக்கு இலக்காகாத பொருளே இல்லை; கண்டபொருள்களிலெல்லாம் ‘எனக்கு, எனக்கு’ என்றே ஆசைவைத்துப் போந்தேன்.
என்னை இந்த விஷயாந்தர வேட்கைகளில்லாதபடி செய்து என்னை உன் திருவடிகளிலேயே கைங்கர்யம் செய்யும்படி செய்துகொள்ள வேணும்.

2. எம்பெருமானே நீ கொடுத்தருளின சரீரத்தினுடைய வழியிலேயே நடந்து கெட்டுத் திரிகின்றேன். என் மன வ்யாதிகள் தீரும்படி கரும பந்தங்களை வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று அடியேன் மஹோபகாரனான) உன்னை அடையப் பெறுவது இனி என்றைக்கோ. 3.2.1

3. என்னுடைய புலன்கள் பெரும் குழிகள். எத்தனை விஷயபோகம் அனுபவித்தாலும் இவை நிறம்பா. மேலும் மேலும் ஆசை பெருகியே நிற்கும். பெருமானே நீர் ஓர் உபகாரம் செய்தருளவேணும்; உன்னைப் பெறுதற்கு இடையூறான என் தொல்லைவினைகளை யெல்லாம் தொலைத்தருளி உன்னைப் பெறுவதொரு நல்வழி தந்தருள வேணும் பிரானே! 3.2.4, 5.8.4, 5.8.6

4. உன் அவதாரங்களுக்கும் நான் தப்பினபடியால் உன் திருவடிகளொழியப் புறம்புண்டான விஷயங்களில் என் நசையெல்லாம் அற்று உன்றன் பொன்னடிகளில் பரம போக்யமான கைங்கரியத்தை நான்பெறும்படி இன்னுமோர் திருவவதாரம் பண்ணியாகிலும் செய்தருளவேணும்.

5. எம்பெருமானே!, பிரளயத்துக்குள்ளிருந்து பூமியை उदधृतासि वराहेण कृष्णेन शतबाहुना என்று நிர்ஹேதுகமாக வராஹவுருக்கொண்டு எடுத்தாப்போலே, என்னிடம் ஒரு காரணம், உபாயம், ஸாதனம் என்று நோக்காமல் ஸம்ஸார வெள்ளத்துக்குள்ளே அலைந்துழல்கின்ற என்னையும் எடுத்தருளி நானும் உன் அடிமை செய்யும்படியாக செய்யவேண்டும். 5.7.6

6. தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே. யானே என்னாலே நான் கெட்டேன்.

எம்பெருமான் என்னை வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ள எதிர் சூழலில் வந்து புக்குத் திரிய, நானே விநாசத்தைச் தேடிக்கொன்டேனே.

ராஜகுமாரன் வேடன் கையிலே அகப்பட்டுத், தன் உண்மைத் தன்மையை மறந்து, வேடர் புதல்வனென்றே தன்னை நினைத்திருக்குமா போலே, நானும் ஸம்ஸார சூழலில் சிக்கி நாண் திருமாலுக்கு அடியேன்” என்கிற நிஜஸ்வரூபத்தை மறந்தேனே.

ஆனால் நான் என்னதான் திருந்திவிட்டாலும், நான் இரக்குமிடம் இந்த ஸம்ஸாரமேயாகையால் இப்போதிருக்கும் என்னுடைய சித்தஸ்திதியை நம்பலாகுமோ? இப்போது நான் “யானே நீ யென்னுடைமையும் நீயே” என்றிருப்பதுபோலவே முற்றிலும் இருப்பேனென்று நம்பமுடியாதே.

இப்போது திருந்தியிருக்கின்ற நான், அநாதி காலமாக அஹங்காரமமகாரங்களினால் மாய்ந்து போனேனே. என்னைத் உன் திருவடிவாரத்தில் சேர்த்துக் கொண்டாலொழிய நான் நிர்ப்பரனாயிரக்க முடியாது’. 2.9.9

7. என்னிடத்துள்ள நீசத்தன்மையைநோக்கி அகன்றுபோக என் பல்வினையை ஸௌசீல்யகுணத்தாலே போக்கி என்னை அபிமுகனாக்கிக் கொண்டவனே! நித்யாநுபவம் பண்ணிக்கொண்டிருக்கிற நிதய் முக்தாகளின் திரளிலிருந்து, என்னை சீலகுணத்தாலே அகப்படுத்திக்கொள்ள இங்கு வந்தவனே! என்னை இன்னமும் சிக்ஷியாதே உடனே உன் தேனேமலரருந்திருப்பாதம் சேருமாறு அருளாய். 1.5.6


2.2 என்னிடம் அனுஷ்டானம் ஒன்றில்லையே. என்னைக்காப்பாற்று


1. உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களானவற்றை எப்படியாவது நினைக்கவே நான் பார்க்கின்றேன்;

இவை ஒவ்வொன்றும் சிந்திக்கும் போதெல்லாம் என் மனம் நெருப்பிலேயிட்ட மெழுகுபோலே நின்று நெஞ்சை உருக்குகின்றனவே. நெஞ்சு சிதிலமாகாதலிருந்தாலன்றோ நினைக்க முடியும். இப்படிப்பட்ட விலக்ஷணகுண சேஷ்டிதங்களைக் கேட்குந்தோறும் என்னெஞ்சம் நெகிழ்ந்து நின்று கண்ணீர் அருவிபோலே சொரிகின்றதே; இதனால் ஒன்றும் ஒழுங்குபட நினைக்க முடியவில்லையே!

உன்னையநுஸத்தித்தால் இங்ஙனே சிதிலனாகும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் தரித்து நின்று உன்னையறுபவிப்பது என்றைக்கோ?

பிரானே! உருகாதே கரையாதே தரித்துநின்று உன்னைப் பேசி உன்னையநுபவிக்க வல்லேனாம்படி பண்ணி உன்னை மகிழும்வகைக்கு நீயே உபாயம் சொல்லியருளவேணும். 5.10

2. ஒரு ஸதானுஷ்டானம் பண்ணி உன்னை அடைய முடியாதபடி உன் ஸௌந்தர்ய குணங்களில் ஈடுபட்டு சிதிலனாகிவிட்டேன். ஆகவே பரமபதத்திலுள்ள நித்யமுக்தர்களது வகுப்பிலே சேர்ந்து உன்னை அநுபவிக்க முடியாதவனாகிவிட்டேன் ஆதலால் அங்குற்றேனல்லேன்.

உன்னை ஒரு பொருளாகவே மதியாத ஸம்ஸாரிகளின் திரளிலே சேர்ந்தவனுமல்லேன்;
உன்னைக் காணவேணுமென்னும் ஆசையாலே தளர்ந்து கிடந்து, எவ்விதமான உபாயத்தையும் அநுஷ்டிக்க க்ஷமனல்லேனாகையினாலே உன்னையொழியவும் தரித்திருக்கிறவர்களின் திரளிலும் சேர்ந்தவனல்லேன்

ஆகவே இங்குற்றேனும் அல்லேன்.

ஆக, பரமபத்திலுள்ளாரிலும் சேர்ந்தவனல்லேன். இந்நிலத்திலுள்ளாரிலும் சேர்ந்தவன் அல்லேன்.

உன்னையே உபாயமாக நம்பியிருந்த சீதா பிராட்டியை தடையெல்லாம் நீக்கி காத்தருளினபடியே என்னையும் நீ காத்தருளவேணும்.5.7.2

3. சரண்யனே, பலன் பெரும் வகையில் எனக்கு யோக்யதை என்று ஒன்றுமில்லை. என் கையிலே கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் இல்லை.

கர்மாநுஷ்டானத்தின் மூலமேயே ஸ்வஸ்வரூபஞானம் ஏற்படும். ஆகவே ஸ்வஸ்வரூபஞானம் இல்லை. ஸ்வஸ்வரூபஞானம் இல்லாத்தால் பரஸ்வரூபஞானம் இல்லை. ஆனாலும் உன்னை மறந்து பிழைக்கமாட்டிற்றிலேன். உன்னையும் அறியாதே

என்னையும் அறியாதே இருந்த அன்று உன்னை இழந்தேன். உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்று உன்னை இழக்கமாட்டேன்.



2.3 எனக்கு நீயே சரண். என்னை ஏற்றுக்கொள்


1. நான் இறக்கும் தருவாயிலும், நான் உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணியருள வேணும். கையும் திருவாழியுமாயிருக்கிற இருப்பைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்ட பெருமானே! நான் உம்மிடத்து துக்க நிவ்ருத்தியை விரும்புகின்றேனல்லேன்; நெஞ்சிலே கோழைகட்டிப் போய்த் தடுமாறும்படியான நிலைமை நேர்ந்தாலும் நேருக; அப்போதும் உன் திருவடிகளில் பக்தி குலையாமே துதிக்கும்படி செய்தருளினாற்போதும். எம்பெருமானே! எனக்கு எப்படிப்பட்ட துர்க்கதி நேர்ந்தகாலத்தும், சிந்தனைமாத்திரம் உன்னைவிட்டு அகலாதிருக்குமாயின், அவ்வளவே நான் உய்யப் போதுமானது 2.9.3

2. என்னை நியமித்துக் கொண்டு, நீ என்னெஞ்சினுள்ளேயே வந்து கிடக்கவேணும் நிலாத்தென்றல் சந்தனம் தண்ணீர்முதலிய பொருள்கள் போல, தனககேயாக என்னைக் கொள்ளவேணும் இவ்வளவே நான் விரும்பும் புருஷார்த்தம். 2.9.4


3. ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; தேவரீர் கர்மம் காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்தும் ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிற்றே, அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாக நிலை நிறுத்த வேணும். 2.9.5


4. என்னை உன்னை அநுபவிப்பது நியதஸ்வபாவமாகும்படி பண்ணியருள வேணும். விசித்ர ஸ்ருஷ்டிகளைப் பண்ணவல்ல நீ, என்னுடைய ஹ்ருதயம் உன்னையநுபவித்து மகிழ்ச்சியையுடையதாம்படி பண்ணவேணும். என்னுடைய வாக்கும் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ணவேணும். என்னுடைய வியாபாரமும் உகப்போடு செய்யும் கைங்காரியமாகவேணும். நானுன்னையநுபவிக்குமாறு வந்தருளவேணும். 2.9.6

எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன்’ 2.9.8


5. கஜேந்திராழ்வானுக்கு உதவ ஆகாசத்தில் நின்றும் வந்து தோன்றினாப்போலே எனக்காகவும் வந்து தோன்றுகிறாயோவென்று அகாசத்தை நோக்குகிறேன்காண். நான் அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுவதும் தொழுவதும் செய்து நிற்கிறேன். சிறுவர்களைப்போலே அழுவது, பெரியார்களைப்போலே தொழுவது எல்லாம் செய்கிறேன்.

குடந்தைகிடந்த மாமாயா திருக்குடந்தையிலேவந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண்வளர்ந்தருளுகிறது எதற்காக? நான் உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணியருளவேணும். என் உடலும் கட்டுக்கலைந்து தளர்ந்துகொண்டே போகிறது. என் ப்ராணனும் விரைவில் நீங்கும், ஆனால் உன் சக்திக்கு குறையொன்றுமில்லையே. நீ உன் சரமச்லோக ப்ரதிக்ஞா வார்த்தையை காப்பாற்றமாட்டாயோ. 5.8.8


6. பெருமானே! என்னையும் எல்லோரையும் அடிமை கொள்வதற்காக எவ்விடத்தும் வியாபித்து விருக்கிறவனே! உன் இந்த அருளும் எனக்குக் கார்யயமாகவில்லையே, நான் உன்னைப் பெறும்வழி நீயே காட்டியருள வேணும்.

7. உன் திருவடியே சுமந்துழல பரதாழ்வானுக்கு மரவடியைக்கொடுத்தாபோல எனக்கும் அருளவேணும். 4.9.9

8. சேதநர்கட்குப் புருஷகாரஞ் செய்வதையே தொழிலாகவுடைய பெரிய பிராட்டியாரை திருமார்பிலே கொண்டு அதனால் மாதவனென்னுந் திருநாமமுடையோனே! கூனியின் கூன் நிமிர்ந்தவனே!, மதுசூதனே!, உன்னுடைய பரம போக்யமான திருவடிகளை நான் பெறும்படி அருள்புரியவேணும். பிராட்டி திருமார்பிலே நித்ய ஸந்நிதாநம் பண்ணியிருக்கும்போது அருளாமைக்குக் காரணமில்லையே ! 1.5.5


9. பிரானே! உன் திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; நின் திருவடியை என் தலைமேல் சேர்த்தால், ஸாலோக்ய ஸாரூப்ய ஸாமீப்யம், ஸாயுஜ்ய மென்கிற நான்கு மோக்ஷ ஸாம்ராஜ்யங்களும் இதிலேயே அடங்கிவிட்டனவாகும். வேறு எதுவும் நான் எஞ்ஞான்றும் வேண்டமாட்டேன். 2.9.1


10. தம்முயற்சியால் ஒருவர்க்கும் அணுக வொண்ணாத உம் திருவடிகளை, நான், அணுகும்படி பண்ணவேணும்.2.9.2


11. உன் திருவடிகளின் நிழல்போலவும் ரேகை போலவும் என்னை ஆக்கிவைக்க வேணும். 2.9.10


2.4 எம்பெருமானே, செவிசாய்க்க மாட்டாயா?


1. பெருமானே, இவ்வளவு கூவியும் நீ செவிசாய்க்கவில்லை என்றால் என் பாபம் தானே காரணமாக இருக்கவேண்டும். நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லிப்போனாலாகாதோ.4.7.3


2. அநுக்ரஹம் செய்யத் திருவுள்ளமில்லையாகிலும் ‘நீர் பாவமே செய்து பாவியானவராகையாலே உம்மோடு கலப்பதற்கு எனக்கு விருப்பமில்லை! என்று நிக்ரஹித்து விட்டேனென்றாவது கண்முன்னே வந்து நின்று சொல்லிப்போனாலாகாதோ? சொல்லுகிற இந்த வார்த்தையாவது என் முகத்தை நோக்கி நீ சொல்லுவாயாகில் அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே.

எம்பெருமானே, எனக்கு மகனாய் நீவரவேண்டும் என்று கேட்காதவர்களுக்கும் மகனாக பிறந்தாய். உன் திருவடி ஸம்வந்தம் கேட்காதவர்க்கும் த்ரிவிக்ரமனாக உலகளக்கும்போது, அவர்கள் சிரஸின்மீது திருவடி வைத்து அருளினாய். உலகம் முழுமைக்கும் க்ருபை செய்த நீ என்மீது க்ருபை செய்யலாகாதோ. கண்ணெதிரே வந்து ஸேவைத்தந்தருளலாகாதோ?

என்னை நீ பாவியென்றாலும் அதில் எனக்கொரு ஆக்ஷேபமில்லை; உன் திரு மிடற்றோசை கேட்கவேண்டுவதே எனக்கு அபேக்ஷிதம்; ஆகவே நீ என் கண்ணுக்கு இலக்காகி வந்து சொல்லவேணும்.உன்னைக்காணாதவளவில் என் உயிர் பிரிய வேண்டுமோ.

எம்பெருமானே, நீ எனக்கு ஞானம் கொடுத்தருளினாய். ஆனால் அதைக்கெண்டு உன்னை அடையவிடாமல், என் ஆத்மாவை ஓர் அழுக்குடம்பில் வைத்து புண்யபாபரூபங்களான பலவகைப் பாசங்களால் கட்டி மாம்ஸம், மேதஸ், இவைகளால் நாற்புறமும் சுவர் எழுப்பி நான் உன்னை அநுபவிக்க விரோதியாய் நிற்கச்செய்து உன்னை அடைய ஸாத்யமாகாதபடி ஸீதையை அசோக வனத்தில் வைத்தாற்போல் புறமே போர வைத்திருக்கின்றாயே, இது ந்யாயமா !.5.1.5

1 comment:

  1. Sultan Casino | Shootercasino
    Sultan Casino offers you a great range of exciting casino games and unique gambling experience. Whether you want to play slot machines 제왕카지노 or table games, you can play at

    ReplyDelete