திருவாய்மொழி என்றால் மேன்மையுடைய வாயினால் சொல்லும் சொற்களாலாகிய நூல் என்பது பொருள். இது ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்ரங்களுள் நான்காவதான சரமப்ரபந்தம். இது ஸாமவேத ஸாரமாகும்.
ஆழ்வார் இப்ரபந்தத்திலே நமக்காக, நாம் உஜ்ஜீவிப்பதற்காக பல பல அத்யத்புதமான விஷயங்களை ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசுரங்களில் கூறியிருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு அனுபவம் ஏற்படும் போதும் அதை பாசுரமாக வெளியிட்டுள்ளார்.
ஆழ்வார் சொல்வதாவது,
மக்களில் பெரும்பாலோர் நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவார்களேயொழிய தமக்கு ஆன்மீக ஞானம் இல்லையே என்று குறைபடுவதில்லை.
அதனாலேயே கண்ணபிரான் உலகமெல்லாம் அறியும்படி அர்ச்சுனனை வ்யாஜமாக்க்கொண்டு पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् என்று பார்த்தனுக்குமட்டுமல்லாமல், அறிவினால் தமக்கு குறைவு இருக்கிறது என்ற ஞானமும் இல்லாத உலக மக்களுக்கு நெறியெல்லாம் சொல்லி பகவத் கீதையை அவர்கள் உஜ்ஜீவிக்க உபதேசித்தான். - திருவாய்மொழி 4.8.6
பெருமானிடம் நமக்குள்ள பக்தி பரிணமிப்பதற்கு நமக்கு ஸம்ப்ரதாய ஞானம் ஏற்படவேண்டியது மிகவும் அவச்யம். நாம் ஸம்ப்ரதாய ஞானம் பெற நாம் முதலில் அர்த்த பஞ்சகத்தை அறிய வேண்டும். இந்த அர்த்த பஞ்சகம் ஐந்து விஷயங்களை நமக்கு போதிக்கிறது. அவையாவன
1. எம்பெருமானின் ஸ்வரூபம்
2. நம் ஸ்வரூபம்
3. நம் லக்ஷ்யம் என்ன
4. நம் லக்ஷ்யத்தை அடையும் வழி என்ன
5. நாம் நம் லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை
மேற்சொன்னவைகளுக்கு விடைகளாவது,
1. ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள், வேறு தெய்வமில்லை என அறியவேணும்
2. எம்பெருமானுக்கும் அவன் மெய்யடியார்க்கும் நாம் அடிமை என உணரவேணும்
3. பெருமானின் திருவடிகளில் அடிமை செய்கையே நம் லக்ஷ்யம் என அறியவேணும்
4. எம்பெருமானை அடைய அவன் திருவடிகளே நமக்கு உபாயம் என உணரவேணும்
5. அவனை அடைய நம்முன் இருக்கும் தடைகளை அறுக்க வேண்டும் என உணரவேணும்
ஆகவிப்படி அர்த்த பஞ்சகத்தை உணர்ந்து தெளிவு பெற்று பேதமை தீர்ந்தாலேயே நாம் நம் பக்தியை சரிவர செய்யமுடியும். - திருவாய்மொழி 4.7.7
இதை கருத்தில் கொண்டு, இத் திருவாய்மொழி ஸாரம் என்னும் தொகுப்பை கீழ்க்கண்ட தலைப்பகளில் நாம் அணுகுவோம்.
1.1. எம்பெருமானின் ஸ்வரூபம் - அத்யாயம் 1
1.2. பெருமானை அடைய ஆழ்வாரின் ப்ரார்த்தனைகள்-அத்யாயம் 2
1.3. பெருமானை அடைய ஆழ்வாரின் துடிப்பு - அத்யாயம் 3
2. நம் ஸ்வருபம் - அத்யாயம் 4
3. நம் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்யம் என்ன - அத்யாயம் 5
4. நமது லக்ஷ்யத்தை அடையும் வழி - அத்யாயம் 6
5. நமது லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை - அத்யாயம் 7
இத் திருவாய்மொழியை அறிய விரும்புவோர் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ள திருவாய்மொழியின் ஸாரத்தை படித்து பயனடைவார்கள் என நம்புகிறேன்.
அவர்களின் வசதிக்காக இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ள விஷயங்களுக்கு அருகில் திருவாய்மொழி பாசுரத்தின் எண்ணும் முடிந்தவரை குறிக்கப்பட்டுள்ளது.
ரகுநாதாசார்யன்
No comments:
Post a Comment