இப்போது ஆழ்வார் தாமான தன்மையில் இல்லை; எம்பெருமானின் நாயகியாக, பராங்குசநாயகியாகி பெருமான் மீது காதல் கொண்டுள்ளார்.
எம்பெருமானும் பராங்குசநாயகியின் காதலுக்குத் தான் இலக்காகப் பெற்று அதையே தனக்குப் ஸூவர்ணமயமான ஒளிமிக்க கிரிடம் முதலாகிய திருவாபரணங்களாகவும். பீதாம்பரமாகவும் அபிமானித்திருந்தான்.
எம்பெருமான் தன் பூமாலைகளாக ஆழ்வாரின் சொல்மாலைகளை ஏற்றுக் கொண்டான். ஆழ்வாரின் அஞ்ஜலியால் தன்னை ஸர்வாபரண பூஷிதனாகக் கருதினான்,
அது கண்டு ஆழ்வார், பெருமானைப்பார்த்து, என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய் ஏழுலகமும் முற்றுமாகி நின்றவனே,
ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரைவளைவாரைப்போலே என்னைப்பிடிக்கைக்காகவே வ்யாப்தனானவனே,
என்னை பெற்ற ப்ரீதியாலே அந்தவ்யாப்தி ஸபலமானதாக நினைத்து மிகுந்த ஆனந்தம் அடைந்தவனே!
என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்கு உன் ஸவ்ரூபம் நானிட்ட வழக்கு என்கு களித்துக்கூத்தாடினார்.
ஆனால் இவை எல்லாம் வெறும் பாவனையாகவே இருக்க, ஆழ்வார் எம்பெருமானோடு உண்மையாகவே சேர ஆவலாக உள்ளார்.
3.1 பராங்குச நாயகியின் பரவை விடு தூது- 1
3.1.1. ஆண்டாளைப்போலே .பிரிவாற்றாமையோடு கூடியிருக்கின்ற பராங்குசநாயகி தன் ஸமீபத்திலிருப்பதொரு நாரையைப் பார்த்து, ‘நாராய்! நீ என் நிலைமைய எம்பெருமானுக்கு அறிவித்து என்னையும் அவனையுஞ் சேர்க்க வேணும்’ உன் நீ அழகிய சிறகுகள் படைத்திருப்பது எனக்காக விரைந்து தூது செல்லுவதற்கன்றோ. அவன் என்னை புறக்கணித்துவிட்டுப் போயிருக்கும் ஸமயத்திலே என் வருத்தங்களை முறையிட்டுக்கொள்ளலாம்படி வந்து முகங்காட்டின உன் கருணையே கருணை. அவனோடே கலந்து பிரிந்து அவனை மீண்டுங் கண்ணாலே காண்பதெப்போதொவென்று விடாய்த்துக் கிடக்கிற என் விஷயத்தில் கருணைகூர்ந்து, விரஹம் தின்ற என் வடிவைக் கண்டு இரங்கி நீயும் நின் சேவலுமாய் பெண்ணும் ஆணும் விட்டுப்பிரியாமல் தூதுபோகவேணும். அடியார்களை நோக்குவதற்கென்றே அவர் கொடிகட்டிக் கொண்டு இருக்கின்றாராதலால் நீங்கள் சென்று சிறிது ஞாபகப் படுத்தினாலேயே, யானைக்கு ஓடி வந்ததுபோல் அரை குலையத் தலைகுலைய ஓடிவருவார். இராமபிரான் மாருதியை இலங்கைக்குத் தூதுவிட்டான்; ஆதலால் என்விடு தூதாய்ச் சொல்வது உங்களுடைய பாக்கியமேயாகும். 1.4.1
3.1.2 இனககுயில்காள்! = என்னைப்போலே நீங்களும் தனியாயிருக்கவில்லையே; கூடிக்களித்திருக்கின்ற நீங்கள் ஸந்தோஷமாக இது செய்யலாமே. அவனோடு கலந்து பிரிந்து வெறுந்தரையாயன்றோ நானிருக்கிறேன்; இப்படிப்பட்ட தாமரைககண் பெருமானாரிடம் எனக்குத் தூதாய்ச் செல்லுகை தருமமன்றோ. எனக்காக அவன் பக்கலிற்சென்று என் நிலைமையை அறிவித்தால் போதும்; அநாதிகாலமாகத் ஸதநாநுஷ்டானம் பண்ணாத நான் திரட்டின பாபத்தாலே அவன் திருவடிவாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ணுதற்கு ஏற்கவே பாக்யம் பெறவில்லை. இப்போது திருவடியைவிட்டு விலகியே போய்விட்டேனே. என் கையிலே ஒன்று மின்றியே அவன் கையையே எதிர்பார்த்திருக்குமிந்த நிலைமையிலும் அவனை இழப்பதுண்டோ? என்று கேளுங்கோள். 1.4.2
3.1.3 மென்னடைய அன்னங்காள் உங்களுடைய பாக்கியமே பாக்கியம்! நீங்கள் சாஸ்திரப்படியே மணந்து கொண்டதனாலன்றோ பிரிவுத்துயரம் விளையப்பெறாமலிருக்கின்றீர்கள்; நான் அப்படியன்றியே காந்தர்வ விவாஹம்போல் மனப்பாங்கினால் கூடினபடியாலன்றோ இப்போது இங்ஙனம் பிரிவாற்றாமையெய்திப் பரிதபிக்கின்றேன். தலைவன் பிரிந்துபோம்போது அங்ஙனம் போகவொண்ணாதபடி வளைத்துத் தடுத்து நிறுத்திக்கொள்ளாமற்போனேனே! மதிகேடியானேனே! தன் புத்தி சாதுர்யத்தினால் வாமன்னாய் சென்று, உலகை மீட்ட கள்வனிடம் தூது செல்லவேண்டும். ஒருத்தி அறிவழிந்து வருந்திக் கிடக்கின்றாளென்று சொல்லுங்கோள். அளவில்லாத பாபங்களை அநுவரதமும் செய்கின்ற ஜனங்கள் நிறைந்த இவ்வுலகின்கண் தானொருத்தி செய்த பாவந்தானா அனுபவித்தும் மாளாதது? என்று கேளுங்கோள். அரைகுலையத் தலைகுலைய ஆனைக்கு உதவ ஓடிவந்தாப்போலே கடுக ஓடி வரும்படி சொல்லுங்கோள். 1.4.3
3.1.4 பராங்குசநாயகி பல பறவைகளை விளித்துச் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்ட சில மகன்றில் பறவைகள் ‘நமக்கும் கைங்கரியம் செய்யச் சிறிது அவகாசம் நேர்ந்தது’ என்று மகிழ்ந்து அருகே வந்து எங்களுக்கு ஏதேனும் நியமனமுண்டோ?, என்று கேட்பனபோல நிற்க, அவற்றைக் கண்டு, ‘அந்தோ! ‘மகன்றில்களே! என்னிலைமையை அவர்க்குச் சொல்லுவீர்களோ? பிரிவில் தரிக்கமாட்டாத என்னுடைய ஸ்வபாவத்தை நன்றாகக் கண்டு வைத்தும் ‘ஐயோ? இப்படிப்பட்டவளையோ விட்டுப் பிரிவது!, ஒருகாலும் பிரியத்தகாது’ என்றிராத என் நீலமுகில்வண்ணர்க்கு என்ன ஸமாசாரம் சொல்லுவேன். நான் இங்கே நிறம் இழந்து பசலையால் பீடிக்கப்பட்டு தவிக்கிறேன். என்னோடு முன்பு கலந்ததனாலே நீலமுகில் வண்ண மேனி நிறம் பெற்றவர் ‘என்னைவிட்டுப் பிரிந்தபின்பும் நிறம் அழியாமல் நீலமுகில் வண்ணராமேயிருக்கின்றாரே. என் நிறம் மட்டும் போய் அவர்க்குப் பிரிவாற்றாமையுமில்லையே, பசலை நிறம் வந்து அவர் வெளுத்துப்போகவில்லையே. அவருக்கு என் சொல்லி யான் சொல்லுகேன். நான் சொல்லியனுப்பவேண்டம்படியாக இருக்கிறவர் உங்கள் வார்த்தைகேட்டா வரப்போகிறார்? இன்றளவும் ஒருவாறு தங்கியிருந்தாலும் இனி ஒரு நொடிப்பொழுதும் தங்காதென்று சொல்லுங்கோள். 1.4.4
3.1.5 நீர் நிறைந்திருக்கும் படியான கொடித்தோட்டங்களிலே இரைதேடுகின்ற குருகே! எப்போதும் நீர் வெள்ளமிட்டுக்கொண்டேயிருக்கின்ற கண்களையுடைவளான என்னைப் பாருங்கள். கூடியிருக்குங்காலத்திலோ ஆனந்தக்கண்ணநீர்; பிரிந்திருக்குங்காலத்திலோ சோகக்கண்ணீர். யாரும் கேட்காமலேயே உலகங்களுக்கெல்லாம் அபீஷ்டங்களை அளிக்கின்றாரே; அப்படிப்பட்டவர் பாவியான எனக்கு உதவலாகாதோ. ஸர்வ ஜந ரக்ஷணம் பண்ணுகிறவர் ஸ்வ ஜந ரக்ஷணம் பண்ணலாகாதோ? நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்த:புரத்துக்கு அரிதாகவேணுமோ? ’
நாராயணன் என்ற சொல் ஸகல சேதநங்களுக்கும் தான் இருப்பிடமாய் அவற்றையும் தான் இருப்பிடாகவுடையனாயிருக்கும் பெருமானையன்றோ குறிக்கிறது. நார-பதத்தின் அர்த்தத்தினாலே நான் அவரைச் சேர்ந்தவளல்லேனோ? என்னைவிட்டால் அவர்க்கு நாராயணத்வம் எங்ஙனே நிரம்பும்?. நான் எக்கேடாவது கெட்டுப்போகிறேன்; நாராயணனென்றும் ஸகல்லோக ஸம்ரக்ஷகனென்றும் விருதுசுமக்கின்ற அவர்க்கு என்னொருத்தியை ரக்ஷியாமையினாலே, அவர் பெற்ற பெயரெல்லாம் மழுங்கிப் போகுமன்றோ; அங்ஙனம் போகாமே நோக்கிக்கொள்ளும்படி சொல்லவேணும்.
கள்ளிச்செடிக்கு மஹாவ்ருக்ஷமென்று பேர் இருப்பதுபோலே அவர்க்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டதோ? அவர் திருநாமத்திற்கு அர்த்தபுஷ்டி இல்லையோ என்று கேளுங்கோள். 1.4.5
3.1.6 கம்பீரத்தன்மையும் அழகும் பொருந்திய வண்டே! எம்பெருமான் இப்படி உபேக்ஷிக்கும்படி என்ன பாவம் பண்ணினோம்!; எம்பெருமான் ‘நம்முடைய நாராயணத்வம் தொலைந்தாலும் தொலையட்டும்; ஒருவிதத்திலும் நமக்கு ஈடல்லாத இந்தப் பராங்குசநாயகியோடு கலந்து கெட்டபெயர் பொறுவதிற்காட்டிலும் நாராயணத்வம் அழிய நிற்பதே சரி என ஒருகால் திருவுள்ளம் பற்றி இருக்கக்கூடும். அப்படியானால், அவருக்கும் அவத்யம்வராமல் எனக்கும் அவர் ஸம்பந்தம் கிடைக்க ஒரு வழியுண்டு; தாம் திருவீதி உலாவப்புறப்படுதல், ஆனைக்கு அருள் செய்ப்புறப்படுதல், என்றிப்படிப் சில யாத்திரைகள் செய்வதுண்டே; அப்படி ஏதேனுமொரு வியாஜங்கொண்டு பராங்குசநாயகி இருக்கிற வீதிவழியாகக் கருடனை ஒருநாள் செலுத்தவேணுமென்று சொல்லவேணும். எங்கள் தெருவே போனால் அவருக்கும் அவத்யம் வாராது. ஜன்னல் வழியே அவரை நோக்கி நானும் என் ஆசை தணிந்து ஜீவிப்பேன்; இதை அவர்க்குச் சொல்லாய். 1.4.6
3.1.7 நான் வளர்த்த இளங்கிளியே! வடிவில் பசுமையாலும் வாயில் பழுப்பாலும் மழலைச் சொற்களாலும் எம்பெருமானை அநவரதம் நினைப்பூட்டிக்கொண்டு என்னை வருத்துகின்ற கிளியே! என்னால் வளர்க்கப்படுகிறவர்கள் எல்லாரும் எனக்குத் தீங்கிழைப்பதென்றே வழக்கமாய்விட்டது; எம்பெருமான் இப்போது எனக்குத் தீங்கிழைப்பதும் என்னுடைய ஸம்பந்தமே காரணமாகவன்றோ; அதுபோலே என்னுடைய ஸம்பந்தமே காரணமாக நீயும் எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருப்பது வியப்பன்று; என்னால் வளர்க்கப்பட்டவனன்றோ நீ.
அபராத ஸஹத்வமென்று, குற்றங்களைப் பொறுத்தருள்பவர் என்று அவர்தாம் விருது பெற்றிருக்கின்றாரே, அதனைச் சிறிது பார்க்கவேண்டவோ. எனது பிழைகளை மாத்திரம் நினைந்தாரேயல்லது, பிழை பொறுக்கவல்ல தமது க்ஷமாகுணத்தை நினைத்தாரில்லையே. அதனை மறந்தாப்போலே எனது பிழைகளையும் மறந்தாலாகாதோ?
பிழையுடையார் பக்கலிலே அருள் செய்யாவிடின் இவர் எங்ஙனம் திருமாலாக இருக்கமுடியும்? அநுக்ரஹமே வடிவெடுத்தவளென்றும் நிக்ரஹமென்பதைக் கனவிலுங் கண்டறியாதவளென்றும் புகழ் பெற்றவளான பிராட்டிக்கு இவர் மணவாளராகில் அவளது உபதேசத்தின்படி நடக்கவேண்டியவரன்றோ இவர். பிழைசெய்யாதவனே உலகில் இல்லை என்று சொன்ன ஸீதா பிராட்டியோடே இவர் ஸம்பந்தம் பெற்றுவைத்து இங்ஙனே பிழைகண்டு உபேக்ஷித்தல் தகுதியோ இப்படி அவர் பிழைகண்டு ஒதுங்குகின்றாரென்பதைப் பிராட்டியறிந்தால் அவள் தானும் பிறகு இவர் முகத்திலே விழிப்பளோ?
இளங்கிளியே! ‘இப்படி அருளாதிருக்கலாமா?’ என்று அவரிடத்துச் சென்று கேள்;
அதற்கு அவர், “குற்றங்களை அளவில்லாதபடி செய்து வைத்திருந்தால் நாம் எப்படி அருள் செய்யக்கூடும். அங்ஙனஞ் சொன்னால் தேவரீருடைய கருணைக்கு இடையூறாக என்ன பிழை செய்தாள்? “தேவரீருடைய கருணை தாராளமாகப் பெருகலாம்படி அவள் இருக்கிறாளேயொழிய அக்கருணை தடைபடும்படி ஒரு அதிப்ரவ்ருத்தியுஞ் செய்த்தில்லையே. ’தேவரீருடைய கருணைக்கும் அப்பால் அவள் என்ன பிழை செய்தாள் என்று கேள்.
இந்த வொரு வார்த்தையை மாத்திரம் நீ அங்குச்சென்று சொல்லவேணும். நீ என்னால் வளர்க்கப்பட்டவனாயிருந்து இவ்வளவு உபகாரமுஞ் செய்யலாகாதோ? 1.4.7
3.1.8 நான் வளர்க்கும் பூவை பக்ஷியே. என் தலைவரோ பக்தர்கள் பக்கலில் பைத்தியம் பிடித்தவர். நானும் தூதுவிட வேண்டுமளவான பைத்தியம் பிடித்தவள்; ஆகவிப்படி இருவரும் அன்பார்ந்திருக்கும்போது இடையிலே சேரவிடுவார் வேண்டுமத்தனையே. அது உன்னாலாகக் கூடியதாதலால் ‘என் நோயை அங்குச்சென்று தெரிவிப்பாய்’ என்று உன்னைப் பல்காலும் வேண்டினேன். இருந்தும் என்னை நீ உபதேக்ஷித்திருந்துவிட்டாய்.
நான் எதுசொன்னாலும் விரைந்து செய்து முடிப்பதே இயல்பாக, ‘எப்போதும் உத்ஸாஹமாகவேயிருக்கு மியல்வுடைய நீ இப்போது என் நிலைமையைக் கண்டு வருந்தாமல் ஏற்கெனவே உன்னை நான் வேண்டிக்கொண்ட பிறகும் எனக்காகத் தூது செல்லாமல் இருக்கிறாயே. நீ இதுவரையில் இருந்த மாதிரியில்லையே. நானோ இப்போது என் நிறம் நீங்கி, பசலை நோயால் பீடிக்கப்பட்டு மிக மெலிந்து முடியும் நிலையில் இருக்கிறேன். இனிமேல் உனக்கு இரையிடுவாரை நீயே தேடிக்கொள்ளாய். 1.4.8
3.1.9 ஓ வாடைக்காற்றே! அங்குமிங்கும் திரிகின்ற குளிர்ந்தகாற்றே! என்றபடி அங்கே அந்தரங்கமாய்த் திரியவல்ல காற்றே. இப்போது எனது சரீரம் எலும்பும் நரம்புமேயாம்படி மிகவும் மெலிந்து போயிற்று. எலும்பிலே துளைத்து நூலைக் கோத்தால் எவ்வளவு ஹிம்ஸையாயிருக்குமோ, அவ்வளவு ஹிம்ஸையைச் செய்கின்றையே.
பகவானை ஆராதிப்பதற்கென்றே நமது கரணகளேபரங்கள் ஏற்பட்டுள்ளன. மலர்போலே எம்பெருமானுக்குப் பரமபோக்யமான ஆத்மபுஷ்பத்தை ஸமர்ப்பித்து எம் பெருமானின் இணையடிக்கீழ்“ அடிமை செய்வதற்காகவே நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட நான் இங்ஙனே எம்பெருமானைவிட்டுப் பிரிந்து துரத்ருஷ்டத்தில் இருப்பது ஏனோ! “நித்யகைங்கர்யத்துக்கு இட்டுப்பிறந்தவஸ்து இப்படியிருக்கக்கடவதோ”. ஏதுக்காக இவ்வாத்மா இப்படி அநர்த்தப்பட்டு கிடக்கவேணும்? என்கிற இவ்விஷயத்தை எம் பெருமானிடத்து விண்ணப்பஞ் செய்து, அதற்குப் பிறகும் அவன் காது கொடாது, என்னிடம்ருந்து வரும் கைங்கரியம் நமக்குவேண்டா’ என்றிருந்தானாகில் நீ அவனோட்டைப் பிரிவுக்குச் சிளையாத என்னுடலை நீ அவச்யம் வந்து முடித்துவிட வேணுமென்று காலைப்பிடித்து வேண்டிக்கொள்கிறேன். 1.4.9
3.1.10 என் நெஞ்சே! நம் காரியம் ஒருவிதமாக முடியும்வரை நீ அவனை விடாதே யிருக்கவேணும். ஆச்ரித விரோதிகளைத் தொலைப்பதற்காகத் திருவாழியுங் கையுமாகவே கண்வளர்ந்தருளுகிறான் பெருமான். . அப்படிப்பட்ட எம்பெருமானைக் காண்பது அரிது; பாக்யவசத்தாலே அவனை காணப்பெற்றால் இவ்வாத்மா ஸம்ஸாரத்திலிருந்து விட்டு நீங்கி மோக்ஷம் அடைவதற்கன்றோ தேவரீரும் முயற்சி செய்கின்றது என்பதாகச் சொல்லவேண்டும்.
சுழன்று வருகிற பேதை நெஞ்சே! நாம் பிறந்ததற்குப் பயன் அவரைக்கிட்டி அடிமை செய்கையாயிருக்க. அது செய்யாதே இங்ஙனம் பிரிந்து பரிதபிக்கும்படியான பாபத்தைப் பண்ணிக்கிடக்கிற நாம் அவரோடே சேருகிறவரையில் அவரை நீ விடாதே அநுவர்த்தித்து என்னைச் சேர்க்கப்பாராய். 1.4.10
3.2. தன் விரஹத்தை எங்கும் காணுதல்
3.2.1 கடற்கரைச் சோலையில் உணவுக்காக ஊக்கங்கொண்டிருக்கின்ற ஒரு நாரை கண்ணுக்குப் புலப்பட, பராங்குச நாயகி அதனுடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மையைக்கண்டு அதுவும் தம்மைப்போலவே பிரிவாற்றாமையினால் வெளுத்துவிட்டதாகக்கொண்டு
என்தாய் உறங்கினாலும் நான் உறங்குவதில்லை. என் உறக்கமின்மை கண்டு வருந்தி என் தாயும் உறங்காள். என்னைப்பெற்ற தாயும், உறங்காதிருக்கும் தேவலோகமும் உறங்கினாலும் நீ உறங்குவதில்லையே! இதற்குக் காரணம் என்ன;
உள்ளம் உருகி நைந்து அதனாலே பயலை நிறம் விஷமேறினாற்போலே உடம்பிலே வியாபித்து, நான் நோவுபடுவது பகவத் விஷயத்திலீடுபட்டதனாலே;
என்னைப்போல் நாயும் வெளுத்திருக்கிறாயே. என்னைப்போலவே நீயும் திருமாலால் நெஞ்சு கொள்ளை கொள்ளப் பெற்றாயோ. நாராய்! ஐயோ! நீயும் நானகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு இப்படியானாயோ. 2.1.1
3.2.2 அன்றில் பறவை ஆணும் பெண்ணும் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாய் அலகைக் கோத்துக்கொண்டு உறங்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் கூவும். அப்படி அவை கத்துகிற குரல் பராங்குச நாயகியின் திருச்செவியிலே விழுந்தது.
தழதழத்த குரலையுடைத்தான அன்றிற்பறவையே! நெஞ்சு பறியுண்டு நெடும் போதாக வருந்திக்கிடக்கின்றாயே! அடிமைப்பட்ட என்னைப்போலே பிரிவாற்றாமை தோற்றவிருக்கிற நீயும் அரவணைமேல் பள்ளிகொண்ட முகில் வண்ணணுடைய துழாய் மாலையை ஆசைப்பட்டு இப்பாடுபடுகிறாயோ? 2.1.2
3.2.3 கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவதும் வடிவதும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லயிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வந்து கரையேறமாட்டாதே கத்துகின்றதாகக்கொண்டு,
உறங்குவதற்கென்று ஏற்பட்டது இரவு; விழித்துக் கொண்டிருபப்பதற்கென்று ஏற்பட்டது பகல் கடலே! இந்த வித்யாஸத்தை உன்னிடத்து கண்டிலோம். நீ எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறாயே. எம்பெருமானின் விரஹத்தாலே என் நெஞ்சைப்போலே உன் நெஞ்சும் உருகிப்போய் நீ எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறாயோ. நான் அந்த இராமபிரானிடத்து ஈடுபட்டிருக்குமாபோலே நீயும் ஈடுபட்டு வருந்துகிறாயோ?
ஸீதை யென்பவளும் நம்மைப்போலே ஒரு பெண் பிள்ளையாயிருக்க அவளுக்காக மாத்திரம் உண்ணாது உறங்காது படாதபாடுகளும்பட்டவர் நம்மைப் பற்றி ஒரு சிந்தனையுஞ் சிந்திக்கின்றிலரே ! 2.1.3
3.2.4 காற்றானது எங்கும் பரவிய தத்துவம் அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலை நின்றிராது; எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும். உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாதபடியிருக்கும் குளிர்ச்சியுடைத் தாயுமிருக்கும் ஆக இத்தனையும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை அறிய கில்லாதே அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசைவைத்து விருப்பம் நிறைவேறப் பெறாமையினாலே இருந்தவிடத்தில் இருக்க மாட்டாதே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய் ஜன்னி ஜ்வரமுற்றுக் குளிர்ந்திருப்பதாகக்கொண்டு
வாடையே! நீயும் நான் பட்டது பட்டாயோ. என்போல் கடலும் மலையும் ஆகாயமும் துழாவி அப்பெருமானைக் காணவேண்டி நின்றவாறு நில்லாதே, எங்குப்போய்த் தேடினால் எம்பெருமான் கிடைப்பனென்று, திருப்பாற்கடலில் சென்று தேடலாமா? திருமலையிற் சென்று நாடலாமா? பரமபதத்திற்கே போய்ப் பார்க்கலாமா என்று இங்ஙனே பலவிடமும் துழாவி அலைகிறாயோ.
இங்ஙனே கடலும் மலையும் விசும்பும் அவனை துழாவித் திரிகின்றவர்கள் நாங்கள் சிலரே என்றிருந்தேன்; காற்றே! நீயும் எங்களைப்போலவே எங்குத் திரிகின்றாய்; இரவு பகல் கண்ணுறங்காதே அலைகிறாயே. கையுந் திருவாழியுமான ஸர்வேச்வரனை நீயும் காண ஆசைப்பட்டு அதனால் இப்பாடு படுகிறாயோ. 2.1.4
3.2.5 மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர்விட்டு அழுகிறபடியாக எண்ணி,
நீயும் நீயும் மதுசூதன் பாழிமையிற்பட்டு அவன்கண் பாசத்தால் என்னைப்போலே அவனுடை. குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு உலகம் வெள்ளங் கோக்கும்படியாகக் கண்ணீர்விட்டு அழுகிறாயோ. 2.1.5
3.2.6 கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு
அந்தோ! முன்பு பூர்ணணாயிருந்த சந்திரனே!’ நேற்றுவரையில் நீ உதித்தவுடனே இருள் சிதறி ஓடுதலைக் கண்டிருந்தோம் இன்று அங்ஙணம் காண்கின்றிலோம் நீ ஒளி மழுங்கிக் குறையுடன் இருக்கிறையே. இப்படி நீயும் எம்மைப்போலே மேனிமெலிந்தமைக்கு என்ன காரணம்? உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே!
அவர் வசனங்களை நம்பி நான் கெட்டதுபோலே நீயுங் கெட்டாயோ? அவர் இயற்கையாக ஸத்யமே சொல்லுகிறவராயினும் இரட்டை நாக்கு படைத்த பாம்பரசனோடே ஸஹவாஸம் உள்ளவர் அன்றோ. 2.1.6
3.2.7 ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து
இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிக்கிறாயே.
நாரையென்ன, அன்றிற் பறவையென்ன, கடலென்ன, வாடைக்காற்றென்ன, மேகமென்ன, இளம்பிறைச் சந்திரனென்ன இங்ஙணம் சேதன அசேதனமாகிய நாங்களெல்லோரும் பகவத் விஷயத்திலீடுபட்டு நெஞ்சிழந்து எங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கதறியழுதுகொண்டிருக்க,
இருளே ! நீயும் எங்களைப்போலே எங்கள் திரளிலே சேர்ந்து கதறியழவேண்டியிருக்க. அது செய்யாதது மட்டுமல்லாமல் கொடிதாக நின்று எங்களை நீ ஹிம்ஸிக்கின்றாயே! இப்படியும் ஒரு கொடுமையுண்டோ? 2.1.7
3.2.8 ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி ஜ்வரம் பற்றியிருக்கிறது கண்டு
நொந்தாராக்காதல்நோய் தமக்கு இருப்பது போலவே விளக்குக்கு இருப்பதாக்க்கொண்டு,
நந்தாவிளக்கமே! நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ. நாட்டுக்குக் கண்காட்டியான உனக்குப் உடம்பிலே இப்படி நோவு வருவதே! 2.1.9
3.3 பராங்குச நாயகியின் தாயின் வருத்தம்
3.3.1 ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பராங்குச நாயகி ஆற்றாமையாலே துடித்து நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகி கண்ணீராய் வழிந்தோடி அசோகவனத்தில் சிம்சுபா வ்ருக்ஷத்தின் கீழே பிராட்டி வருந்தினார்ப்போல் வருந்தி திக்குக்கள்தோறும் கண்களைச் சுழலவிட்டு எம்பெருமான் ஆபத்திலே வந்து உதவத் தவறமாட்டான், திடீரென்று ஓடிவந்தே தீருவன் என்று நிச்சயித்துச் சுற்றிலும் பார்த்தபடியே ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானுக்குத்தான் உதவவேணும், மற்றையோர்க்கு உதவலாகாது என்று ஏதேனம் ஸங்கல்பமுண்டோ வென்று சொல்லிவாடுகின்றாள்.
வந்து உதவவேணுமென்று திருவுள்ளங்கொண்டால் ஒரு தூணிலோ துரும்பிலோ தோன்றியும் உதவலாமே; அவனுக்கு அசக்யமான தொன்றில்லையே! என்று சொல்லியும் உயிரை ஒருவாறு தரித்துவைத்துக் கொண்டு வாடுகின்றாள் என்று அவள் திருத்தாய் சொல்லுகிறாள். 2.4.1
3.3.2 பாணாசுரனின் ஆயிரந்தோள்களையுந் துணித்து உஷைக்கும் அநிருத்தாழ்வானுக்கும் மணம் செய்தருளின நீர் இப்பெண்பிள்ளை திறத்தில் இரங்காதிருப்பது ஏனோ.
இவளுடைய நெற்றியழகைக் கண்டால் ஒரு நொடிப்பொழுதாகிலும் இவளைவிட்டுப் பிரிந்திருக்கமுடியாதே. பெற்ற தாயான எனக்கே ஆகர்ஷகமாயிருக்கின்ற இவள் அழகு உமக்கு அநாதர விஷயமானது எங்ஙனனேயோ.
இவளை நீர்மறந்தாலும் உம்மை நீர்மறக்கலாமோ? உம்முடைய குணம் உமக்குத் தெரியாதோ? நம்மைப் பிரிந்தவர்கள் பிழையார்கள் என்று நீர் அறியமாட்ரோ? உம்மைக்காணும் ஆசையுடன் நைகின்றாள். நீர் இவளைக்காண ஆசைப்படவேண்டியது ப்ராப்தமர்யிருக்க விபாரீதமாக நீர் இருப்பது என்னே!
உடைமையக்காண உடையவனன்றோ ஆசைப்படவேண்டும் உடையவனைக் காண உடைமை ஆசைப்படும்படியாயிற்றே!
ஆசை யென்பது ஒரு கடலாகச் சொல்லத்தக்கதாதலால், இவள் கடலிலே வீழ்ந்து துடிக்கிறாளே. தடைகள் கனத்திருக்கின்றனவோ. தடைகளை தொலைப்பது உமக்கு ஒரு பெரிய காரியமோ என்கிறாள். 2.4.2
3.3.3. பிரானே! நீர்ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகிபோல்வார் ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்த்தினாலன்றோ இப்பெண்பிள்ளை துடித்து நிற்கிறாள்;
ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்கவிட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறுகிறாள்.
இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு.
இரக்கமே வடிவெடுத்தாற்போலிருக்கின்ற நெஞ்சையுடைய இவள் நெருப்போடே சேர்ந்த அரக்கும் மெழுகும்போலே உருகுகின்றாள். இவளுடைய நிலையோ இது; நீரோ இரக்கமென்பது சிறிதுமில்லாம லிருக்கிறீர். உம்மைப்போலே இவளும் இரக்க மற்றவளாக இருக்கும்படி செய்துவிட்டால் இடையில் நான் துடிக்க வேண்டியதில்லை; இவளோ இரக்கமனத்தினள்; நீரோ இரக்கமில்லாதவர். இதற்கு என்ன செய்வேன்?
உம்முடைய இரக்கந்தவிர வேறொன்றால் போக்கக்கூடியதாக இல்லையே இவளுடைய வருத்தம். வேறு எதைச்செய்வேன் நான்? ‘நாம் யாருக்கும் யாதொரு காரியமும் செய்வதில்லை; என்று நீர்சொல்வதற்கும் இடமில்லாதபடி ஒரு பிராட்டிக்காக எவ்வளவு செய்தீர். பக்ஷபாதச் செயல் செய்யாதே இவளைக் கொள்ளும். 2.4.3
3.3.4 மகளே! பதாறாதே எம்பெருமான் தன்பால் மோகித்திருக்குமவர்களுக்கு காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ?
அவளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது. அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை வென்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு
-என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக்கொண்டு ஒருவாறு தாரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளே.
நீ நினைத்தபோதே அடியாரிருக்குமிடத்தே கொண்டுவந்து சோக்கவல்ல பெரிய திருவடியை ஊர்தியாகவுடைய வனல்லையோ அப்படியிருக்கச் செய்தேயும் வரக்காணாமையாலே நெஞ்சு கலங்கி நெடுமூச்செறிந்து நிற்கிறாள்; கண்ணீரைத் தாரைதாரையாகப பெருகவிட்டு நிற்கிறாள். கலங்கினவளாய் உன்னைத்தொழுவதும் செய்யா நிற்கிறாள். இவளையோ உபேக்ஷை செய்வது. என்செய்வேன். 2.4.4
3.3.5 இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? இரவும் பகலும் இவள் விஷயமாக நீர் வாய் வெருவவேண்டியது போய் உம் விஷயமாக இவள் வாய் வெருவ வேண்டும்படியாயிற்றே!
அவ்வளவேயோ! ஆனந்தக் கண்ணீர்; பெருக வேண்டிய கண்கள் சோகக் கண்ணீர் பெருகிநின்றனவே! இவள் ஏதேனும் அதிகமாக ஆசைப்பட்டதுண்டோ? விரஹஜ்வரத்தாலே வாடின இவள் மார்விலுள்ள மாலையை வாங்கி, உம்முடைய மார்விலுள்ள மாலையைக் கொடுத்தால் போதுமே; வண்டு பண்ணின தவமும் இவள் பண்ணவில்லை போலும் ஒரு வண்டாகப் பிறக்கப் பெற்றிலேனே யென்று துவண்டு நிற்கின்றாள் காணும்.
இவள் அலமாபபுத்தீர இத்தனை திருத்துழாய் ப்ரஸாதமும் கொடுக்கின்றீர் இல்லையே. உம்முடைய ஸ்வபாவம் நிஷ்கல்மஷமன்றோ; இப்படி இரக்கமற்றவராக நீர் இருக்கிற வழக்கமில்லையே; உம்முடைய இரக்கம் எங்கே போயிற்று? 2.4.5
3.3.6 எம்பெருமானுடைய தயவில் குறையிருப்பதாகத் தாய் சொன்ன வார்த்தையைக் கேட்ட மகள் அந்த வார்த்தையைப் கேட்கப்பொறாமல்
‘என் கொழுநனுக்குத் தயவில்லையென்று சொல்லலாமோ? கடலில் நீர்வற்றிப் போயிற்று என்பாருமுண்டோ? நம்முடைய பாவமென்று நம்மை நொந்துகொள்ளலாமே யல்லது அவருக்குக் கருணையில்லை யென்று வாய்திறக்கலாமோ? பெருமாளுக்கு ஒருநாளும் தயவு இல்லாமற் போகாது; என்னுடைய தெளர்ப்பாக்யத்தினால் இங்ஙனம் ஸந்தேஹிக்க வேண்டியதாகிறதவ்வளவே. என்று சொன்னாள்.
நீ தயாளுதான் என்று அறுதியிட்டுவிட்டால் விருப்பம் வளரச் சொல்லவேண்டாவோ. பிரான் என்னும் நீ அடியார்க்கு உபகாரஞ்செய்வதையே தொழிலாகவுடையவனல்லனோ. 2.4.6.
3.3.7 தன்னுடைய நெஞ்சிலுள்ளது பிறரறியாதபடி மறைத்துக்கொண்டிருக்கு மியல்வுடைய இவள் இப்போது படும்பாடு என்னே வஞ்சனை !
பிராட்டி திருவடியிடத்தில் “ஒரு மாதத்திற்கு மேல் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்று சொல்லியனுப்பினாள்’ அதைக் கேட்ட நீர் பிராட்டியைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் தாரித்திருக்க என்னால் முடியவில்லையே என்றாயே. இப்படி நீர் அவளிடம் தோற்க வேண்டியது ப்ராப்தமர்யிருக்க இப்போது இவள் தோற்றிருப்பது ஏதோ வஞ்சனையாக நடந்த காரியமே யன்றி ருஜூவாக நடந்தபடியன்று. 2.4.7
3.3.8 உம்மை ஆச்ரயமாகப் பற்றியிருக்கும் இவள் பிரதிகூலர் பட்டபாட்டைப்படுவது தகுதியோ?
மிடுக்கையுடைய கம்ஸன் நினைத்த நினைவு அவனோடே போம்படிபண்ணி அவனை முடித்தீர்; உம்மைத் தோற்பிக்க நினைத்தவர்களை நீர்தோற்பிக்கின்றவராயிருந்தீர்; பிரதிகூலர்களிடத்திலே வெற்றிபெறுவதும் அநுகூலர்களிடத்திலே தோல்விபெறுவதும் உமக்கு ப்ராப்தமர்யிருக்க இரண்டிடத்திலும் வெற்றி உம்முடையதாகவே யிருக்கத்தகுமோ?
உம்மையே தஞ்சமாகப் பற்றினவிவள் இப்பாடுபடலாமோ? இவள் படும்பாடுகளைச் சொல்லப்புகுந்தால் ஒரு மஹாபாரதத்திற்காகுமே.
ஸம்ஸாரிகளைப்போலே உண்டியே உடையே உகந்தோடித்திரியும்படியாக வைத்தீரல்லீர்; நித்யமுக்தர்களைப்போலே நித்யாநுபவம்பண்ண வைத்தீருமல்லீர்;
கம்ஸனைப்போலே முடியச் செய்தீருமல்லீர்;
உம்மையே தஞ்சமாகப்பற்றின விவளை எத்தனை பாடு படுத்த வேணுமோ!. 2.4.8
3.3.9 உம்மைப் பிரிந்ததுமுதல் இடைவிடாது நோவுபடுகின்ற இவ்வேழையின் விஷயத்திலே நீர்செய்ய நினைத்திருப்பது என்ன?.
ஸூர்யன் அஸ்தமிப்பது உதிப்பது யாதொன்றுமறியாள். ஸம்ஸாரிகள் உதயமானவாறே யதேஷ்டமாகத் திரிந்து வேண்டிய பொருள்களை ஆர்ஜிக்கலாமென்று களிக்கிறார்கள்; அஸ்தமித்தவாறே ஆர்ஜித்த பொருள்களைக்கொண்டு யதேஷ்டமாக விஷயபோகங்கள்; செய்யலாமென்று களிக்கிறார்கள்;
இப்பெண்பிள்ளையோவென்னில் உதயாஸ்தமயங்களில் வித்யாஸமில்லாதவளா யிருக்கின்றாள். சைதந்யமற்றவளோவென்னில், அல்லள்; பாரிமளமும் தேனும் நிறைந்த திருத்துழாய் விஷயமான வார்த்தையாகவே யிருக்கின்றாள்.
கூர்மையையுமுடைய திருவாழியை நீர் ஏந்தியிருப்பது எதற்காக? அத்திருவாயுதத்தைக்கொண்டு அநுகூலரை வாழ்விக்கவும் வல்லீர், பிரதி கூலரை அழியச்செய்யவும் வல்லீர்; இவள் திறத்து நீர்செய்யநினைத் திருப்பது எதுவோ. இவள் பேற்றில் நீர்நினைத்திருக்கிறதென் ?” 2.4.9
3.3.10 இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் மீந்துக்கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர்நோக்கிக்கொள்ளவேணும்.
இது நமக்கு துர்லபம்’ என்றறிந்தாலும் ஆசையை விடமாட்டாத இளம்பருவமுடையவள். ஆக இப்படிப்பட்ட இவள் இரவும் பகலும் கண்ணுங் கண்ணீருமுர்க இருக்கின்றாள். தாமைரையிலே முத்துப்பட்டாற்போலே இக்கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற இருப்பபைக் காட்டிலெறித்த நிலாவாக்காமல் நீர்ஒடிவந்து காணவேண்டாவோ?
அவளிடம் நாம் வந்து கலப்பதற்கு தடைகள் கனக்கவுண்டே என்கிறீரேல், இராவணனிலும் வலிதோ இவளுடைய விரோதி வாக்கம்? அவனுடைய ஐச்வர்யமெல்லாம் நீறாகும்படி இலங்கையைப் பாழாக்கினீர்; ஒன்றை அழிக்க நினைத்தால் கிழங்குகூட மிகுந்திராதபடி அழிக்குமாவராயிருக்கின்றீர்; அப்படியே இவளையும் அழிக்க நினைக்து விட்டீரோ? எவ்வளவு அழித்தாலும் இவளுடைய கண்ணழகை மாத்திரமாவது குலையாமே நோக்கி யருளவேணும். உயிர்போகாதபடி நோக்கிக் கொள்ளவேணும். 2.4.10
3.4 பராங்குச நாயகி தன்னையே பெருமானாக பாவித்துக் கொள்ளல்
நாயகி நாயகனைப் பிரிந்து வருந்தும் காலத்திலே அனுகரித்து தரித்தல் என்றொரு முறையுண்டு. அதாவது, ராஸக்ரீடை செய்த காலத்திலே கண்ணன் தன்னை மறைத்திட, கோபியர்கள் தங்களையே கண்ணனாக பாவித்து நான் குழலூதுகிறேன், நான் காளிங்க நர்த்தனம் ஆடுகிறேன், நான் கோவர்ர்ரன மலை தூக்குகிறேன் என்று தரித்து இருந்தாற்போலே, நாயகனாக தன்னையே நினைத்து நாயகி போதுபோக்குவது உண்டு.
ஆண்டாள் திருப்பாவை பாடியது, கோபியராக தன்னை அனுகரித்து தானே.
இப்போது, விரஹதாபத்திலிருக்கும் பராங்குச நாயகி, தன்னையே எம்பெருமானாக பாவித்துக்கொண்டு அவனை அனுகரிக்கிறாள். 5.6
1. ஜகத் ச்ருஷ்டி, ஸம்ஹாரம்
கடல் சூழ்ந்த ஞாலம் முழுவதையும் படைத்தவன் நானே
பஞ்ச பூதங்களும் நானே
ப்ரபஞ்சஸ்ருஷ்டியை பண்ணினது நானே
நிகழ் எதிர் இறந்தகாலங்கள் நானே.
முக்கட்பிரான் யானே,
திசைமுகன் யானே,
அமரரும் யானே, அமரர்கோன் யானே,
இவர்கள் எல்லோரையும் நிர்வஹிப்பவனும் நானே
பிரளய காலத்திலே எல்லாரையும் வயிற்றிலே வைத்து ரக்ஷித்ததும் நானே
2. விபவாதாரம்
மந்தரம் நாட்டி அமிர்தம் கடைந்தெடுத்தது நானே
மஹாவராஹமாகி பூமியை காத்தது நானே.
ஞாலம் அளந்தவன் யானே
ராவண ஸம்ஹாரம் செய்ததும் நானே
கன்று மேய்த்தேனும் யானே
ஆநிரை காத்தேனும் யானே
ஆயர் தலைவனும் யானே
கோவர்த்தனமலையைக் தூக்கி நின்றவன் நானே
ஏழு எருதுகளையும் வலியடக்கி நப்பின்னை பிராட்டியை மணஞ்செய்து கொண்டவன் நானே
பஞ்சபாண்டவர்களை ரக்ஷித்தருளினவன் நானே
இப்படி பராங்குசநாயகியின் பெருமான் பால் வ்யாமோஹம் அதிகமாகி பித்தை அடைந்துவிட்டாள்.
3.5 தாய்மார்களின் சீற்றம்
பராங்குசநாயகியின் பெருமான் பால் வ்யாமோஹம் கண்டு உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது’ என்று தாய்மார்கள் சீரினார்கள். தாய்மார் நாயகியின் காதலை புரிந்துகொள்ளாமல் வையவும், பழிதூற்றவும் தொடங்கினார்கள்;. நம் குடிக்கு இவள் பெரும்பழியை விளைப்பவளென்று கருதித் தாய்மார்கள் ‘இனி இவன் பெருமானை ஸேவிக்கவொண்ணாதபடி செய்து விடுவதே கருமம்” என்றும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.
அவள் முகத்தைக் கையிலேயிட்டுக் கொண்டு நைந்து கிடந்த்தை கண்ட தாய்மார் ‘சாண் நீளச் சிறுக்கிக்கு இப்படியும் ஒரு இருப்புண்டோ?’ என்று மேலும் கைசுடுக்கி வையத் தொடங்கினாள் தாய்.
பராங்குச நாயகியின் பதில்
தாய்மார்களே! என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேறுமாகில் அந்த பெருமானின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று அவனைச் சீறில் சரியேயொழிய என்னைச் சீறுவது முறைமையன்று.
நான் ஏதேனும் ஒரு சாதாரண புருஷனை கண்டு மோஹித்துப் படுகிறேனோ?
குறைவற்ற கீர்த்தியையுடைய பெருமானின் பக்கலின்றோ நாள் ஈடுபடப்பெற்றது.
நீங்கள் என்னெஞ்சைக்கொண்டு அவனை ஸேவித்தீர்களாகில் இங்ஙனே வையமாட்டீர்கள். இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள்?
என்னை அப்பெருமானைக் காணவொண்ணாதபடி செய்து விடுவது என்கிற உங்கள் எண்ணம் அந்தோ! தண்ணீர்பெருகிச் சென்றபின்பு அணைக்கட்ட பாரிக்குமாபோலேயிருக்கிறது.
இது நான் அவனை காணப்பெறுவதற்கு முன்னமே சேய்திருக்கவேணும்;
அது செய்யாதே இன்று மறுக்கப் பார்ப்பது பயன் தராது.
அம்மா, அவன் என்னெஞ்சை ஆக்கிரமித்த பின்பு நாண் நாணங் காத்திருக்கவொண்ணுமோ. விலக்ஷணமான திருமேனியழகும், அவன் திருவாழியேந்திய அழகும் என்னெஞ்சிலே வேர் விழுந்தனவானபின்பு, பழியென்றாலென்? பாவமென்றாலென்? நானோ சிளைப்பது என்றாள்.
3.6. தாய் மனம் கலங்குகிறாள்
எம்பெருமான்பால் பராங்குச நாயகியின் வ்யாமோஹம் மேலும் அதிகரித்தது.
சந்திரனைச் காட்டி ‘நீலமணிவண்ணனே!’ என்று அழைக்கலானாள்.
மலையைப்பார்த்து, உலகங்களை அளக்க நிற்கிற ஸர்வேச்வரன் என்கிறாள்
தெருவில் திரியும் கன்றைப்பிடித்து கண்ணபிரான் மேய்த்த கன்று இது என்கின்றாள். ஸர்ப்பத்தைக்காட்டி ‘எம்பெருமானுடைய திருப்பள்ளி மெத்தை இது’ என்கின்றாள்.
இப்படி எம்பெருமானையே கண்டு, அவன் நினைவாகவே இருந்து வாய் வெருவிக்கொண்டேயிருக்கும் மகளைப்பார்த்து மனம் கலங்குகிறாள் தாய்.
அநுபவித்து முடிக்க அரிய பாபத்தை யுடையேன்
நான்பெற்ற இவளை எம்பெருமான் மயக்கி பண்ணுகிற இத்தகைய கூத்தாட்டு எவ்வளவில் ஆகும் என்று ஒன்றும் அறிகிலேன் என்கிறாள்
இப்படி வ்யாகுலப்பட்டு, பராங்குசநாயகியின் தாய், குறத்தியை அழைத்து குறி விசாரிக்க, அவள் தேவதாந்தர பூஜை செய்ய ஆயத்தமானாள்.
அது கண்டு, உண்மை அறிந்த பராங்குச நாயகியின் தோழி,
தாய்மார்களே! நீங்கள் இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு ஸ்வரூப விருத்தமானதைச் செய்து மதுவையும் மாம்சஸத்தையும் ஆராதனையாக வைக்கவேண்டா.
இப்பெண்பிள்ளை ஒரு காலத்திலும் தேவதாந்தர பஜனம் பண்ணியறியாள்.
ஆகவே நீங்கள் திருத்துழாய் மாலையை அணிந்துள்ள ப்ரபுவினுடைய திருவடிகளை நோக்கி மங்களாசாஸனம் பண்ணினால் அதுவே இப்பெண்பிள்ளையடைந்திருக்கிற நோய்க்கு அருமையான மருந்தாகும்
அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை துதியுங்கோள்:
துதித்தவுடனே இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத் தொழுது கூத்தாடுவாள் நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் எம்பெருமானே என்ற்றிந்தவர்கள் வேதம் வல்லார்கள். அப்படிப்பட்ட வேதவித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக்கொள்ளாமல் அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மையென்கிறாள்.
3.7 ஆழ்வாரின் கோபம்
விச்லேஷத்தின் எல்லையில் நின்ற பராங்குச நாயகி, நான் இவ்வளவு ப்ரார்த்தித்தும் கெஞ்சியும் அவன் வரவில்லை
ஆய்ச்சியரோடு ராஸக்ரீடை செய்த அன்று மறைந்து நின்று அவர்களுக்கு மிகவும் அலமாப்பை விளைத்து, பின்னை புன்முறுவல் காட்டிவந்து புகுந்துநின்றாற்போலே நமக்கும் வந்து முகங்காட்டுவன் என்றிருந்தால் அப்போதும் அவன் வந்து தோன்றவில்லையே யென்று கதறினாள்.
நிரந்தரம் துக்கத்தையேஅனுபவித்தாலும் முடியாதே நிற்கின்ற இந்த ஆத்மாவை இந்நிலையில் ரக்ஷிப்பார் யார் என்று விசனப்பட்டாள்.
எம்பெருமான் என்பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளைகொண்டு எட்டா நிலத்திலிருக்கிறான். அவன் எங்குச் சென்றால்தானென்ன? சபதஞ் செய்துகிடக்கிற எனக்குத் தப்பிப் பிழைக்கவொண்ணுமோ அவனால்?
தோழி, கேள். ! நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
மடலூரப்போகிறேன் நான்; என்னை ஊரார் பழி சொல்லும்படி பண்ணின அவனை லோகமே பழி சொல்லும்படி நான் பண்ணக்கடவேன் என்று தன் கோபத்தை வெளியிடுகிறாள்.
No comments:
Post a Comment