Tuesday, February 8, 2011

5. நம் லக்ஷ்யம்

நம் லக்ஷ்யம் – எம்பெருமானை அடைவதே

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று ஸ்வாமி நம்மாழ்வார் சொன்னது போல் நாம் எல்லோரும் அடைய வேண்டிய இலக்கு ஸ்ரீவைகுண்டமே. ஸ்ரீ வைகுண்டம் சென்றடைந்து, ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம் பெற்று, எம்பெருமானுடன் கலந்து, அவன் திருவடிவாரத்திலே வழுவிலா அடிமையாகிய கைங்கர்யம் செய்வதே நம் லக்ஷ்யம்.

நாம் அடையவேண்டிய லக்ஷ்யமாகிய எம்பெருமானைப்பற்றி முதல் அத்யாயத்தில் நாம் ஏற்கெனவே அறிந்துகொண்டோம். ஆனாலும் எம்பெருமானைப்பற்றி எவ்வளவு தெரிந்துகொண்டாலும் குறைவேயாதலால், நம் லக்ஷ்யமாகிய எம்பெருமானைப்பற்றி மேலும் சில வார்த்தைகள்:

1. ஸ்ரீமன் நாராயணனனே பரத்வம்

1. மோக்ஷத்தின் ஸ்வாமியான பரமபதநாதன் ஸ்ரீமன் நாராயணனே
2. அவன் எல்லாம் அறிந்த மேம்பட்ட தேவர்களான நித்ய சூரிகளின் தலைவன்
3. தானே மூன்று மூர்த்தியான ஆதி முதல்வன்
4. படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றையும் தானே செய்பவன்
5. எல்லா தேவதைகளிலும் மேம்பட்டவன்
6. வேதத்தால் பரம புருஷன் என்று அழைக்கப்படுபவன்
7. ஸகல தேவதைகளாலும் ஆராதிக்கப்படுபவன்
8. நித்யவிபூதியையும் லீலா விபூதியையும் தனதாகக் கொண்டவன்
9. ஆதி மூலமே என்ற கூட்ட குரலுக்கு ஓடி வந்தவன்
10. ஆதியும் அந்தமும் இல்லாதவன்
11. முக்காலமும் தானே ஆகி காலத்தினால் யௌவனம் மாறாதவன்
12. நம் புலன்களால் அறியமுடியாதவன்
13. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் வ்யாபித்த விராட் புருஷன்.
14. எல்லா ஞானங்களும் அவனே
15. அவன்தான் பர ப்ரம்மம்

2. அவன் வ்யூஹ புருஷன்

16. நம் குறை கேட்பதற்காகவே திருப்பாற்கடலில் இருப்பவன்
17. திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது நமக்காக சிந்தித்துக் கிடப்பவன்
18. பாற்கடலின் அலைகள் ஆதிசேஷனை ஊஞ்சல் போல் ஆட்ட பள்ளியிருப்பவன்
19. ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளில் உள்ள ஆயிரம் நாகமணிகளில்
தன் திருமேனி ப்ரதிபலிக்கும் கண்ணாடியறையில் துயில் கொள்பவன்
20. சயனிக்கும்போது ஆதிசேஷனை துயிலணையாகக் கொண்டிருப்பவன்
21. ஆமர்ந்திருக்கும்போது ஆதிசேஷனை சிம்மாசனமாகக்கொண்டிருப்பவன்
22. செல்லும்போது ஆதிசேஷனை குடையாகக்கொண்டிருப்பவன்

3. அவனே ஸ்ருஷ்டி கர்த்தா

1. திருப்பாற்கடலிலிருந்து ச்ருஷ்டி முதலிய கார்யங்களை செய்பவன்
2. தான முக்காரணமுமாகி தன்னிடமிருந்தே உலகை ச்ருஷ்டிப்பவன்
3. மூலப்ரக்ருதி முதலாக ஸகல வஸ்துக்களுக்கும் காரணபூதன்
4. ப்ரபஞ்சத்துக்கு தானே தனி வித்தானவன்
5. வானம், ஒளி, காற்று, நீர், நிலம் எல்லாம் தானே ஆனவன்
6. சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தமாகிய தன்மாத்ரைகளாகியும் நின்றவன்
7. சூர்யனாகவும் சந்திரனாகவும் இருந்து நமக்கு ஒளி தருபவன்
8. பிரமனுக்கு நாபியியில் இடம் கொடுத்து பத்மநாபன் ஆனவன்
9. ருத்ரனுக்கும் தன் திருமேனியில் இடம் கொடுத்தவன்
10. தான் சரீரியாகி உலகத்தை தன் சரீரமாகக்கொண்டவன்
11. தேவன், மனிதன், திர்யக், தாவரம் ஆகிய நால்வகை படைப்பு செய்பவன்
12. காய் கனிகளுடைய ப்ரம்மாண்டமான மரத்தை ஒரு வித்தில் வைத்திருப்பவன்
13. பெரிய சரீரத்தை ஸூக்ஷ்மமாகவும், ஸூக்ஷ்மத்தை பெரிதாகவும் ஆக்குபவன்
14. ஸமஸ்த வஸ்து ஸ்வரூபத்தையும் தன் அதீனமாகக்கொண்டவன்
15. அகர முதல எழுத்தெல்லாம் தானே ஆனவன்
16. ஓங்கார ஸ்வரூபியானவன்
17. சொற்களாகி, வாக்கியங்களாகி, வேதமாக நிற்பவனும் அவனே
18. வேதமாகவும் வேதங்களின் பொருளாகவும் இருப்பவன்
19. வேதாந்தங்களை தன்னுடைய அங்கங்களாகக்கொண்டவன்

4. அவனே காப்பவன்

20. நாராயணனான தானே விஷ்ணுவாக அவதரித்து காக்கும் கடவுளானவன்
21. நாராயணன் என்ற பெயராலேயே தன்னை நமக்கு புகலாக காட்டியவன்
22. தான் படைத்த உலகைக் குத்தி எடுத்து அளந்து, உண்டு, காத்தவன்
23. நிலம், நீர், ஒளி, காற்று, ஆகாயங்களுக்கு நியாமகன்
24. ஆச்ரிதர்களை மலையையும் தூக்கி ரக்ஷித்தவன்
25. ஏழுலகும் காப்பதையே சிந்தையில் வைத்திருப்பவன்
26. ஜகத் ரக்ஷணார்த்தமாகவே அவதாரங்கள் செய்பவன்
27. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்றபடி எங்கும் வியாபித்து இருப்பவன்
28. நான் எங்கும் இருக்கிறேன் என்று ப்ரஹ்லாதன் மூலம் காண்பித்தவன்
29. உலகங்களுக்கெல்லாம் ஆதாரமாய் நிற்பவன்

5. அவனே அழிப்பவனும்

30. அவன் அழித்தலும் காத்தலே
31. ப்ரளய காலத்தில் ஸமஸ்த சேதன அசேதனங்களை தன் வயிற்றில் வைப்பவன்
32. இப்படி ஏழு உலகங்களையும் விழுங்கி தன்னுள் இருத்துபவன்
33. ஏழுலகும் உண்டு தனக்கு ஓர் ஆலிலை மட்டும் வைத்துக்கொண்டவன்
34. பின் பாலகனாகி அந்த ஆலிலையில் துயின்ற ஆதிதேவன்
35. கடலில் தோன்றி கடலிலேயே மறையும் அலைகளை போலே தன்னுள் தோன்றி தன்னுள் மறையும் ஸ்ருஷ்டியும் அப்படியே என காட்டியவன்
36. மார்க்கண்டேயனுக்கு தன் வயிற்றினுள் ஏழுலகும் காட்டியவன்
37. ஏழு உலகங்களையும் யசோதைக்கு தன்னுள் காண்பித்தவன்

38. ப்ரளயம் முடிந்த பின் அவைகளை வெளிக்கொணர்ந்து மறுபடி ஸ்ருஷ்டிப்பவன்
39. இப்படி உலகங்களைப் படைத்து, காத்து, அளந்து, உண்டு உமிழ்பவன்

40. ப்ரம்ம ருத்ராதி தேவர்களின் காலத்தை நிர்ணயிப்பவன்
41. கொடுத்த வரத்தை தவறாக பயன்படுத்தும் தீயோரை அழிப்பவன்



6. அவன் விபவ அவதாரங்கள்

42. இவ்வுலகைப்படைத்து அதனுள்ளே தானும் உதிப்பவன்
43. இஷ்டமான திரு உருவங்களை தரிப்பவன்
44. ஆமை, பன்றி, சிங்கம், ஆயன், அரசன் என்று பல பிறப்பெடுப்பவன்
45. ஒவ்வொரு பிறப்பிலும் நமக்கு உயர்ந்த குணங்களை கற்பிப்பவன்
46. ஆச்சர்யமான நம்பமுடியாத கார்யங்களையும் செய்பவன்
47. சூரியனையே மறைத்து வானிலும் பெரிய மாயைகள் செய்பவன்

மீனாய்

48. மீனாய் அவதரித்து ப்ரளய ஜலத்தில்ருந்து வேதத்தை மீட்டவன்

கூர்மனாய்

49. அமரர்கள் வேண்டுதலுக்கு இணங்கி அலைகடல் கடைந்தவன்
50. ஆமையாய் அவதரித்து மந்தர மலையை தன்மீது தாங்கி நின்றவன்
51. கடலில் அமுதம் பிறக்க, அவ்வமுதுடன் பிறந்த பெண்ணமுதை மணந்தவன்

வராஹனாய்

52. வராஹனாய் அவதரித்து நம் பூமியை வெளிக்கொணர்ந்தவன்
53. ஞானப்பிரானாய் நாமஸங்கீர்த்தனத்தின் பெருமை உணர்த்தியவன்
54. நான் என் பக்தனை நினைவில் வைத்திருப்பேன் என்றவன்

நரசிங்கனாய்

55. ஒரு பக்தன் சொல்லுக்காகவே அவதாரம் எடுத்தவன்
56. தன் பக்தனுக்காக சிங்கமாயும் மனிதனாயும் இணைந்து அவதரித்தவன்
57. ராமனைப்போல் தேடி, அணைகட்டி என்று தாமதியாமல் உடனே வந்தவன்

வாமன, த்ரிவிக்ரமனாய்

58. மகாபலி கொள்ளைகொண்ட உலகங்களை மீட்பதற்கு வாமனனாவன்
59. வாமனனாய் வந்து தான் படைத்த நிலத்தை தானே தானம் கேட்டவன்
60. சிறு குரளாய் இருந்து நெடிது வளர்ந்து பெரு நிலம் கடந்து அளந்தவன்
61. த்ரிவிக்ரமனாய் நம் எல்லோர் சிரஸிலும் தன் திருவடி வைத்தவன்
62. அவனை நாம் தொடமுடியாததால் அவனே வந்து நம்மை தொட்டவன்
63. கங்கையை உண்டாக்கி நமக்கு தன் ஸ்ரீபாத தீர்த்தத்தை அருளினவன்
64. தம் திருவடி ஸம்பந்த்தால் கங்கைக்கு நம் பாபம் தீர்க்கும் திறன் கொடுத்தவன்
65. ருத்ரன் தலை மீது கங்கை நீர் சேர்த்து அவனை சிவன் ஆக்கியவன்

வீர ராமனாய்

66. கடலைப் படைத்து, படுத்து, கடைந்து, அணை கட்டி, தாண்டியவன்
67. இராட்சசனுக்கும் அபயம் கொடுத்து அவனை சிறந்த பக்தனாக்கியவன்
68. இன்று போய் நாளை வா என்று சொல்லி திருந்த வாய்ப்பு கொடுத்தவன்
69. முன்னவனை முடித்து சரணடைந்த பின்னவனை அரசனாக்கியவன்
70. வானரப்படை கொண்டு அசுரப்படை வென்றவன்
71. யாராலும் எதிர்க்க முடியாதவன்

தர்ம ராமனாய்

72. மனிதனாக வாழ்ந்து நல்வழி சென்று தர்ம நெறி புகட்டியவன்
73. தந்தையின் வாய்ச்சொல் காக்க முடி துரந்து கானகம் சென்றவன்
74. பட்சிக்கு ஈமக்ரியை செய்தவன்
75. குரங்குகளுக்கு நண்பனாவன்
76. அணிலிடம் அன்பு காட்டியவன்

மாயக்கண்ணனாய்

77. இரு தாய் பெற வேண்டி இரு குலத்தில் வந்துதித்த மாயன்
78. வசுதேவனுக்கு தன்னையும் நந்தகோபனுக்கு தன் அனுபவத்தையும் கொடுத்தவன்
79. பேய்ச்சி பாலை உண்டு, வெண்ணை உண்டு, மண்ணை உண்டவன்
80. பேய்ச்சி பாலை குடித்து அவள் உயிரையும் குடித்தவன்
81. விஷப்பாம்பின்மேல் நடனமாடியவன்
82. ஆச்ரித விரோதிகளை தன் விரோதியாக பாவித்து பாரதப்போரை வென்ற மாயன்
83. மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று நாமம் பல கொண்டவன்

எளியனாய்

84. வெண்ணை உண்டு, பாண்டம் உடைத்து, ஓசை கேட்டு களித்தவன்
85. வெண்ணை களவாடி, அகப்பட்டு, கட்டுண்டு, அழுது நின்ற எளியவன்
86. இடையனாக கன்றுகளை மேய்த்தவன்
87. அஞ்ஞானிகளான இடையர்களிடையே தோன்றி கலந்து பழகியவன்
88. ஆய்ச்சிகளால் அனுபவிக்கப்பட்ட ஆயர் கொழுந்தாய் நின்றவன்
89. குசேலருக்கு பாத பூஜை செய்த எளியவன்
90. பார்த்தனுக்கு தேர் செலுத்தி பக்தர்களுக்கு தாழ்ந்து செல்பவன்

ஆசார்யனாய்

91. கீதோபதேசம் செய்து தன் தெய்வத்தன்மையை காட்டியவன்
92. கீதை உபதேசித்து தர்மத்தின் விளக்கம் தந்தவன்
93. உன் கடமையை செய். பலனை நான் கொடுக்கிறேன் என்றவன்
94. நம் அறியாமை போக்கி பக்தி கலந்த ஞானத்தை கொடுப்பவன்
95. நம் துயக்கு, மயக்கு, மயர்வை போக்குபவன்
96. நல்லோர்களின் எண்ணமே தன் எண்ணம் என்று சொன்னவன்
97. நல்லோர் பயிலும் நூலாக இருப்பவன்

பல அவதாரங்கள்எடுத்து...

98. விஷ்ணுவாய் அவதாரம் எடுத்து காக்கும் கடவுளானவன்
99. ஹயக்ரீவனாய் அவதரித்து ஞானம் புகட்டியவன்
100. தன்வந்த்ரியாய் அவதரித்து ஆரோக்யத்துக்கு வழி காட்டியவன்
101. ஹம்ஸமாய் அவதரித்து வேதம் ஓதியவன்
102. வ்யாஸர் போன்ற மகர்ஷிகளாகவும் அவதரித்தவன்
103. அவன் பேரும், ஊரும் ஆதியும் யாரும் நினைக்க முடியாதவன்

7. அர்ச்சா மூர்த்தியாய்

104. பரமபதத்தில் குறாயுள்ளோர் இல்லையாகையாலே நம்மில் கலக்க வந்தவன்
105. எல்லா ஊர்களிலும் தனக்கு இடம் பிடித்து ஸன்னிதி கொண்டிருப்பவன்
106. எண்ணற்ற அவதாரங்களாக, திவ்ய மங்கள விக்ரஹங்களை உடையவன்
107. அர்ச்சையில் நம் கோயில்களில் இருந்து நம்ம மனதுள் புக வந்திருப்பவன்
108. ஒவ்வொரு ஊரிலும் இருந்து நம்மை நல்வழிப்படுத்த மறியல் செய்பவன்
109. கருணை, பொறுமை, அன்பு என்னும் ஸ்ரீ, பூ, நீளா தேவிகளுடன் இருப்பவன்
110. பக்த பராதீனனாக பக்தர் சொல் கேட்டு எழுந்தருளியிருப்பவன்
111. ஆழ்வார் சொன்னவண்ணம் செய்த பெருமான் அவன்
112. நாம் செய்யும் பல்வகை ஆராதனத்தையும் ஏற்பவன்
113. ஆயிரம் நாமங்களால் அறியப்பட்டு வணங்கப்படும் ஸஹஸ்ர நாமன்

8. அவன் பன்னிரு நாமங்கள்

114. அயனுக்கும் அரனுக்கும் ஸ்வாமியானதால் கேசவன் ஆனவன்
115. சேதன அசேதனங்களுக்கு புகலிடமானதால் நாராயணன் ஆனவன்
116. திருமகளை மார்பில் கொண்டதால் மாதவன் ஆனவன்
117. பசுக்களையும் பூமியையும் ரக்ஷிப்பதால் கோவிந்தன் ஆனவன்
118. எங்கும் வியாபித்து இருப்பதால் விஷ்ணு ஆனவன்
119. அரக்கர்களை வென்றதால் மதுசூதனன் ஆனவன்
120. மூவுலகையும் அளந்திடும் திருமேனி எடுத்ததால் த்ரிவிக்ரமன் ஆனவன்
121. குரளாய் வந்து யாசித்து நின்றதால் வாமனன் ஆனவன்
122. நமக்காக பரிந்துபேசும் ஸ்ரீயை தரித்து இருப்பதால் ஸ்ரீதரன் ஆனவன்
123. நம் மனதை தன்பால் ஈர்ப்பதனால் ஹ்ருஷீகேசன் ஆனவன்
124. பத்மத்தை நாபியில் கொண்டதால் பத்மநாபன் ஆனவன்
125. யசோதையிடம் கயிற்றினால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனவன்

9. அவன் நீர் போன்ற நற்குணமுடையவன்

நீர் கீழ் நோக்கி பாயும்.
அவன் தாழ்ந்தோரிடத்தில் எளிதாகச்செல்வான்

நீர் மேல் நோக்கி பாயாது.
நான் உயர்ந்தவன் என இறுமாப்பு கொண்டால் அவன் நம்மிடம் வரமாட்டான்.

எந்த காரியத்துக்கும் நீர் வேண்டும்.
எந்த காரியத்துக்கும் அவன் அனுக்ரஹம் வேண்டும்.

நீர் வேண்டாமல் யாரும் இருக்க முடியாது.
அவனை வேண்டாமல் யாரும் இருக்க முடியாது.

நீரின் தன்மை குளிர்ச்சி.
அவனும் குளிர்ந்த தன்மை உடையவன்

நீர் கொதித்தால் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும்.
அவன் கோபம் கொண்டாலும் அவனையே பற்ற வேண்டும்.

நீரை நமக்கு வேண்டும்படி வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
அவனையும் நமக்கு வேண்டும்படி வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

நீரை எப்பாத்திரத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
அவனையும் எந்த ரூபத்திலும் வைத்துக்கொள்ளலாம்.

நீரைக்கொண்டு மற்ற பண்டங்களை சமைக்கலாம்.
பெருமானைக் கொண்டு மற்ற பலன்களைப்பெறலாம்.

நீரை நீருக்காகவே பருகலாம்.
எம்பெருமானையே புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்.

நீரில் ஐந்து வகை. மேகம், கடல், மழை, கிணறு, நிலத்தடி நீர்.
பெருமானும் ஐந்து வகை. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி.

நீர் ஆகாயம், பூமி, பூமிக்கு கீழே என்று எங்கும் வ்யாபித்திருக்கும்
பெருமானும் அப்படியே எங்கும் வ்யாபித்திருப்பவன்

நீரைக்கொண்டுதான் எதையும் சுத்தி செய்யவேணும்.
பகவன் நாமம் கொண்டுதான் எதையும் சுத்தி செய்யவேணும்.

தோண்டத் தோண்ட சுரக்கும் நீர்.
கொள்ளக் கொள்ள இன்பம் தருவன் பகவன்

நீர் நமக்காக இருக்கிறது.
பகவான் நமக்காக இருக்கிறான்.

நீர் தடாகங்களை எல்லோரும் அணுகி பயன் பெறலாம்.
பகவானையும் எல்லோரும் அணுகி பயன் பெறலாம்.

நீரில் இறங்கி. படிந்து, மூழ்கி, துளைந்து, வாய்மடுத்து, ஆடி களிக்கலாம்
அவனும் படிந்து, மூழ்கி, துளைந்து, வாய்மடுத்து, ஆடி களிக்கக்கூடியவன்

குழாமாகச்சென்று நீரை அனுபவிப்பது மிகவும் இன்பம் தரும்.
குழாமாகச்சென்று அவனை அனுபவிப்பதும் மிகவும் இன்பம் தரும்.

படகில் சிறிது த்வாரம் இருந்தாலும் நீர் உள்ளே புகுந்துவிடும்.
சிறிது இடம் கொடுத்தாலும் பகவான் நம்முள்ளே புகுந்து விடுவான்.

எல்லா நீரும் நீரே. ஆனால் நதிகளின் நீர் விசேஷம். எல்லார் மனதிலும் பகவான் உள்ளான். ஆனால் கோயில்களில் உள்ளவன் விசேஷம்.

கோயில்களில் உள்ளவன் விசேஷம். ஆனால் திவ்ய தேசங்களில் உள்ளவன் மிகவும் விசேஷம்.

தாகம் உள்ளவர் நீர் பருகுவர்.
தாபம் ( மன வருத்தம் ) உள்ளவர் பகவானைப் பருகுவர்.


இப்படிப்பட்ட மேம்பட்டவனை அடைவதே நம் லக்ஷ்யம்.
இப்பேற்பட்டவனை அடைய நாம் நித்யம் ஆராதிப்போமாக.


அடையவேண்டியவனும் அவனே
அவனை அடையும் வழியும் அவனே

No comments:

Post a Comment