விஷயபோகங்களுக்கு ஆயதனமாகப் பற்றியிருக்கிற சரீரங்களானவை மின்னல் போலவுங்கூட நிலைத்திராதவை. ஆகவே விடவேண்டியதையும் செய்யவேண்டியதையும் உடனே செய்யுங்கள்.
6.1 விடவேண்டியவை
1. எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விடுங்கள்
2. அஹங்கார மமகாரங்களையும் விட்டொழியுங்கள் 1.2.3.
3. இந்த்ரியங்களை அடக்கி வாஸநைகளின்மேலுள்ள பற்றுக்களை விடுங்கள் 1.2.4.
4. விஷயங்களிலே நீ வைத்திருக்கிற பற்றை விட்டு அவனுள் முற்றிலடங்குங்கள் 1.2.6
5. உண்டியே உடையே என்று அவைகளிலேயே மூழ்கியிருக்காதீர்.
6. ஸ்ரீவைஷ்ணவ ஸ்வரூபத்திற்கு சேராத விஷயங்களையும் விடுங்கள் 1.2.3
7. நான் ஸ்வதந்த்ரன், எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினையாதீர்கள் 1.2.9
8. ஐச்வர்யம் ஸந்தானம் முதலான அற்பபலன்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு அவனைவிட்டுப் பிரிந்து போய்விடாதீர்கள் 1.6.1
தொண்டு செய்து அமுதமுண்ண விரும்பியிருப்பீர்களாகில் புறம்பான பற்றுக்களில் நசையைத் தவிருங்கோள்; அங்ஙனம் தவிர்த்து அப்பெருமானைத் தொழுங்கோள். அங்ஙனம் தொழுதால் இவ்வாத்மாவோடே பொருந்திருக்கின்ற கருமங்களை வாஸநையோடே போக்கி மீட்சியற்ற செல்வமாகிய மோக்ஷ புருஷார்த்தத்தை அவன் தானே கொடுத்தருள்வான். 1.6.8
6.2 செய்யவேண்டியவை
1. அற்ப பலன்களை விரும்பாமல் அவனையே பரம்போக்ய வஸ்துவாகக்கொண்டு அவனையே ஆசைப்படுங்கள்
2. எல்லையில்லாத ஆநந்தமயமாயிருக்கும் பரம் பொருளை பற்றுங்கள்
3. அவனையே என் மாதா பிதாவும் ஸகலவித பந்துவாகவும் பற்றுங்கள் 1.2.6
4. அவனுக்கு ஸகலவித கைங்கரியங்களிலும் செய்வதில் ஊக்கமுற்று இருங்கள்.1.2.6
5. எம்பெருமானின் குணானுபவம் செய்யுங்கள்
6. அவனுடைய வீர சரிதங்களைக் கேட்டு போதுபோக்குங்கள்
7. நான் பெருமானுக்கு அடிமை என நினையுங்கள்
8. அஞ்சலியுடன் மனம் செலுத்தி ஸ்தோத்திரம் சொல்லுங்கள் 4.3.2
9. கரணங்களுக்கு பகவதநுபவமே யாத்ரையாகும்படி செய்யுங்கள்
10. திருவாராதனம் செய்யுங்கள்
11. அர்ச்சா முர்த்திக்கு மனத்தாலும் வாயாலும் சரீரத்தாலும் பணிவிடை செய்யுங்கள்
12. எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோள். 1.2.1. 1.2.2
13. ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் என்ற இரண்டும் குலையாதிருக்கும்படி
இருங்கோள். 5.8.8
[1] எம்பெருமானே சரண் என்பதைத்தவிர மற்ற உபாயங்கள் சிறிதும் அற்றிருக்கை ஆகிஞ்சந்ய மெனப்படும். அனுமன்,
[2] எம்பெருமானின் அனுக்ரஹம் உடனே கிடைக்காவிடினும் பிறர்மனைதேடி ஓடப்பாராதே. இவ்விடமொழிய வேறுயபுகலில்லை” என்கிற திண்ணிய அத்யவஸாயத்து டனிருக்கை அநந்யகதித்வமெனப்படும்.
உன்காரியத்தில் நீ எவ்வளவு தாமதித்தாலும் என் காரியத்தில் நான் நிஷ்டை குலையமாட்டேன். என்னைப்பற்றியவரையில் நீதான் எனக்கு உபாயம். எனக்கு உன்னுடைய அனுபவம் கிடையாமற்போனாலும் உன் திருவடியே தஞ்சம். எனக்கு வேறு களைகண் இல்லை என்னும் விச்வாஸமே ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் என்பவை.
ராமபிரான் வருவதற்கு தாமதமானாலும் சீதாப்பிராட்டி அவன் நிச்சயம் வருவான் என்று காத்திருந்தாள் அல்லவா?. சீதா பிராட்டியை தன் முதுகிலே ஏற்றிச்செல்லுகிறேன் என்றதை நிராகரித்தாளல்லவா? - திருவாய்மொழி 5.8.8
தாளும் தடக்கையும் கூப்பி என்று, கால் கூப்புகை, கை கூப்புகை. இவையிரண்டாலும் ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் தெரிவிக்கப்பட்டவாறாம்:
கால்களை ஒன்று சேர்த்து நின்றால், கூப்பிவிட்டால், வேறெங்கும் எனக்குப் போக்கிடமில்லையென்று ஸூசனையாதலால் அதனால் அநந்யகதித்வம் தெரியும்;
கைகூப்பிவிட்டால் என்கையில் ஒன்றுமில்லை என்கிற ஸுசனையாதாலால் அதனால் ஆகிஞ்சந்யம் தெரியும்.
அவன் தான் ஸர்வேச்வரனாயிற்றே, நமக்கு அவன் முகந்தருவானோவென்று யோசிக்க வேண்டாம்
1. அவன் ஸௌசீல்யமே வடிவாயிருப்பவன். .
2. அவன் ஸர்வேச்வரனேயாகிலும் ஆச்ரிதர் பக்கல் ஸ்நேஹ ஸ்வபாவனாயிருப்பவன்
3. ஆச்ரிதர்களுடன் புரையறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவன்
4. மேன்மையடன் நீர்மையும் உள்ளவன்.
5. ஸகலவித பந்துவுமாகவும் இருப்பவன்.
6. அடியார்களிலே , அறிவு ஒழுக்கம் ஜாதி முதலிய ஏற்றத்தாழ்வு பாராதவன். எவ்வகுப்பினர்க்கும் ஆச்ரயணீயன்.
6.3. எம்பெருமானின் திருவாராதனம் செய்வது எப்படி ?
உலகத்தில் ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும்போது இதை இவன் ஸ்வீகரித்து என்ன குறை சொல்லப் போகிறானோ என்று நெஞ்சு தளும்பியிருக்க வேண்டிவரும்.
ஆனால் புத்திரன் பிதாவுக்கு விருந்திட்டால் ஏதேனுங் குறையிருந்தாலும் அது கண்டு தகப்பன் வெதும்பமாட்டான். அவனுக்கு வேண்டுவதெல்லாம் மகனின் அன்பே.
அதுபோன்ற ஸம்பந்தம் எம்பெருமானுக்கும் நமக்குமுண்டு. ஆக, பெருமான் ஆராதிக்க ஸுலபன்
1. தன்னை ஆராதிக்க மனம் கண் உடல் மொழி போதுமானவன்
2. தம் பெருமைக்கு குறைவாக செய்யும் ஆராதனத்தையும் உகப்பவன்
3. நம் அபசாரங்களைப் பொறுத்து நாம் செய்யும் ஆராதனத்தை ஏற்பவன்
4. எவராலும் தொழக்கூடியவன்
5. யாரும் எளிதில் ஆச்ரயிக்கக்கூடியவன்
6. செவ்வைக்கேடான மக்களுக்கும் திவ்ய தரிசனம் தருபவன்
7. நாம் அவனைப் பல்லாண்டு பாடுவதை மிகவும் விரும்பவன்
8. ஒரு வேளை தொழுதாலும் அந்தமில்லா பேரின்பம் தருபவன்
9. காசு செலவில்லாமல் சுலப வஸ்துக்களாலே ஆராதிக்கக்கூடியவன்
10. பூக்களை கோராமல் இலையை (துளசியை) விரும்புபவன்
11. நாம் இட்டது கொண்டு திருப்தி அடைபவன்
12. நாம் உகந்து உண்ணும் வெண்ணையை தானும் திருடி உண்டவன்
13. அங்க ப்ரதக்ஷிணம் போன்று உடல் வருத்தி உபாஸிக்க வேண்டாதவன்
14. நாம் அஞ்சலி செலுத்தினாலேயே மிகவும் ஸந்தோஷப்டுபவன்
நாம் கண்களினின்று நீர் வெள்ளமிட நெஞ்சு குழைய ஓர் அஞ்ஜலி பண்ணினால் எம் பெருமான் தன்னை ஸர்வாபரண பூஷிதனாகக் கருதுகிறான் அதுவே ஹ்ருதயபூர்வமாக இருந்தால் அதை சந்தனமாகவும் உகக்கிறான். நாம் வாயால் சொல்லும் ஸ்தோத்திரங்களாகிற சொல் மாலைகளை எம்பெருமான் பூமாலைகளாக ஏற்கிறான். அதுவும், ஆழ்வார் அருளிச்செயல்களை சொன்னோமானால் அவைகளை தான் பீதாம்பரமாக அணிகிறான். 4.3.2
ஆக எம்பெருமானின் பூஜையிலே சுத்தமான தீர்த்தத்தை அர்க்ய, பாத்ய, ஆசமனீய, ஸ்நாநீயமாக ஸமர்ப்பித்து ஏதேனுமொரு சுத்தமான பூவையிட்டு ஏதூப தீபங்களை காட்டினாலும் போதும். ஆராதனை எளிமையாக இருந்தாலும் போதும்.
1. ஏற்கனவே அமைந்துள்ள மனம், மொழி, மெய்கள் மூன்றும் அவன் விஷயத்தில் உபயோகப் படுத்துவதற்காகவே தந்தருளப்பட்டவை. இந்த உறுப்புகளை, அவன் விஷயத்திலேயே உபயோகப்படுத்துங்கள். இத்தனையே வேண்டுவது 1.2.8
2. தன்னைவந்துபணிகின்றவர்களைத் தான் பரீக்ஷித்துப்பார்ப்பன், இவரகள் ஏதேனும் க்ஷுத்ரபலன்களைப்பெற்றுக்கொண்டு போய்விடுவார்களா? அல்லது அவற்றில் நசையற்று நம்மையே பரமப்ரயோஜநமாகப் பற்றுகிறவர்காள? என்று பார்ப்பன், எம்பெருமான் பார்ப்பது இவ்வளவே.
அகன்று போகிறவர்களாயிருந்தால், க்ஷுத்ரபலன்களைத்தந்து அவர்களை அகற்றிவிடுவன்,
அங்ஙனல்லாதவர்களுக்கு தானே முற்றுமாக இருப்பான். அப்படிப்பட்டவர்களுக்கு அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே என்னும்படியாயிருப்பன். 1.6.5
3. அடுத்தது, எம்பெருமானை ஆச்ரயித்து எம்பெருமானே என் மாதா பிதாவும் ஸகலவித பந்துவும் என்றும் கொள்ள வேண்டும். எம்பெருமானே என் மாதா பிதாவும் என்று ஆனபிறகு, இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை என்றவொரு அத்யவஸாயமும் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்; சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள். ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ?
பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும் தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
பெரிய திருவந்தாதி 70
4. பாவங்கள் நம்மை நரகம் அனுப்பும். நரகத்தில் தண்டனை அனுபவித்தபிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறப்பைக் கொடுக்கும்,
புண்ணியங்கள் நம்மை ஸ்வர்கம் அனுப்பும். ஸ்வர்கத்தில் சுகம் அனுபவித்தபிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறப்பைக் கொடுக்கும்,
பரம புருஷார்த்தமாள மோக்ஷம் விரும்பி நிற்பார்க்கு ஸ்வர்க்க நரகங்களிரண்டும் தடையே. ஆதலால் நாம் மோக்ஷம் அடைய புண்ய பாபங்களிரண்டும் தொலையவேணும். 1.6.9
நம் லக்ஷ்யமாவது புண்யத்தினால் கிடைக்கும் ஸுகங்களையும் வெறுத்து பாப கார்யங்களையும் செய்யாமல் எம்பெருமானை அடைந்து அவனுக்கு தொண்டு செய்வதே.
ஆகவே ஈடிலா திருக்கல்யாணகுணங்களையுடைய நாராயணனுடைய அடியவர்களை ஒரு நாளுங் கைவிட மாட்டாத திருவடிகளைச் சேருங்கள். 1.2.10
நீங்கள் இப்படி எம்பெருமானை ஆச்ரயிப்பதாக முயன்றவளவிலே விரோதி கருமங்கள் அனைத்தும் தொலைந்துபோம்; அவற்றைத் தொலைக்கப் பிராட்டி இருக்கிறாளல்லவா. பிராட்டியை புருஷகாரமாகப் பற்றினாருடைய குற்றங்களைக் கணிசியாதே கைக்கொள்ளவல்ல திருவடிகள் அல்லவோ எம்பெருமானின் திருவடிகள். 1.3.8
6.4. பாகவதர்களைப் புருஷகாரமாகக்கொன்டு எம்பெருமானைப் பற்றுங்கள்
பகவானை ஸேவிப்பதைவிட பாகவதர்களை ஸேவிப்பது மிகவும் உயர்ந்த்து. பகவத் சேஷத்வத்தின் எல்லை பாகவத சேஷத்வம் எனப்படுகிறது. இந்த பெரும் ஸ்ரீவைஷ்ணவ தத்வத்தை விளக்கி ஆழ்வார் கூறுவதாவது: திருவாய்மொழி 3.7
1. பாகவத சேஷத்வம் பரம விசேஷம்.
A. ஏனெனில், பகவானே பாகவத சேஷத்வத்தை தானே அனுஷ்டித்துக்காட்டினானல்லவோ. பாகவதர்களில் தலைவனான ஆதிசேஷனுக்குப்பின் பலராமனுக்குப்பின் பிறந்து “பாகவதற்கோர் கீழ்க்கன்றாய்” என்னும் அவனளவிலே தன் பாரதந்திரியத்தைக் காட்டினான்.
B. பாரதப்போரில் ‘ஆயுதமெடேன்’ என்று சொல்லிவைத்தும் ஆச்ரிதபக்ஷபாதத்தாலே ஆயுதமெடுத்தும் காரியம் செய்தருளினான்.
C. ஆச்திதர்களுக்கு தன்னையே கொடுக்க அவன். கண்ணனாய்த் திருவவதரித்து ஒவ்வொருவர்க்கும் தன்னை முற்றுமாகக் கொடுத்தான்.
D. அடியார்க்கு தன்னையே கொடுப்பதுபோலத் தனது திவ்யாயுதத்தையும் அவர்களுக்கே தந்தவனாயிற்றே அவன். அம்பரீஷ சக்வர்த்திக்கும் தொண்டமான் சக்வர்த்திக்கும் தன் சக்ராயுதத்தையே தந்து உபகரித்தது இதிஹாஸ புராணப்ரஸித்தமன்றோ.
2. ஆகவே நாங்கள் பாகவதர்கேட்கே ஆட்பட்டவர்கள்.
A. எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள்
B. எம்பெருமானைத் தாளும் தடக்கையுங்கூப்பிப் பணியுமவர்கள்
C. எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.
D. எப்பொழும் எம்பெருமானின் பரத்வத்திலே யீடுபட்டு பேசுமவர்கள்
E. அவன் திருப்பாற்கடலில் சாய்ந்தருளும்படியை வாயாரப்பேசி அந்தக் கிடையழகிலே யீடுபட்டிருக்குமவர்கள்.
F. அற்ப பலன்களுக்காக எம்பெருமானை அணுகி அப்பலன் கைபுகுந்தவாறே விலக நினைக்காமல் எம்பெருமானோடு இடைவிடாது பழகுவதையே பெருஞ் செல்வமாக வுடையவர்கள்
இவர்கள் எனக்கு எக்காலத்தும் பிறவிவேதாறும் ஸ்வாமிகளென்கிறார். இவர்களே பிறவிதோறும் எம்மை ஆட்கொள்ளவல்ல நாதர்கள் என்கிறார்.
மேலும்
3. நாங்கள் எம்பெருமானின் அடியார்க்கு அடியாருக்கும் அடியார்களே
A. எம்பெருமானுடைய அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள்
B. எம்பெருமானுக்கு தோற்றவர்களான பாகவதர்களுக்குத் தோற்றிருக்குமவர்கள்
இவர்களும் எனக்கு எக்காலத்தும் பிறவிவேதாறும் ஸ்வாமிகளென்கிறார்.
இப்படியாக தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்று தாம் சேஷத்வத்தின் எல்லையிலே நிற்க விரும்புகிறார் ஆழ்வார்.
त्वद् भृत्य भृत्य परिचारक भृत्य भृत्य भृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ என்ற முகுந்தமாலையும் காண்க.
4. ஆழ்வார் மேலும் சொல்வதாவது
A. எம்பெருமானை ஏத்துமவர்கள் நரகத்திற்குச் செல்லுதற்குரிய பாவங்களைச் செய்தவர்களாயிருந்தாலும் அவர்கள் எமது தொழுகைக்கு உரிய சிறந்த குலத்திற் பிறந்தவர்களாகக் கொள்ளப்படுபவர்கள்.
B. ப்ராஹ்மண க்ஷத்ரிய ஆதி நான்கு ஜாதிகளைத்தாண்டி (திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், நம்பாடுவான் போல்) மிக நீச ஜாதியராக இருந்தாலும் அவர்கள் பரமனைப் பயிலுந் திருவுடையவர்கள் ஆகில் அவர்கள் பிறந்த வருணம் தொழில் எதுவானாலும், அவற்றைக் கணிசிக்கத் தேவையில்லை; அவர்களிடத்துப் பரமனைப்பயிலுந் திரு உள்ளதா என்பதொன்றே பார்க்கத்தக்கது.
C. மேன்மேலும் இந்த ஸம்ஸாரத்தில் பிறப்பது எமக்கு வேண்டாததாயினும் பாகதவதர்கட்கு ஆட்பட்டிருத்தலாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெறுவதாகில் எத்தனை பிறப்புகள் நேர்ந்தாலும் உத்தேச்யமே என்கிறார்
ஆக நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் எம்பெருமானே என்றறிந்தவர்கள் பெருமானின் அடியார்களை புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிய வேண்டும்.
ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் ஸ்ரீராமஸந்நிதானத்திலே புகும்போது வானர முதலிகளைப் பணிந்து அவர்கள் மூலமேயே எம்பெருமானை பற்றினாரன்றோ.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மூலம் பகவதாச்ரயணம் பண்ணுவானேன் என்னில்,
இங்கு ஸ்ரீ நம்பிள்ளை சொல்வதாவது,
மதுரகவிகள், சத்ருக்னன் அனுஷ்டித்த்துபோலே ஸ்ரீவைஷ்ணவர்களே ஆச்ரயணீயர்; அவர்களுக்கு மேற்பட்டு எம்பெருமானளவிலே சென்றுகூட ஆச்ரயிக்கவேண்டியதில்லை.
ஆனாலும் ஸஜாதீயர்களிடத்திலே ருசி விச்வாஸங்கள் உண்டாவது அரிதாகையாலே, யானையின் மீது ஏறவிரும்புமவர்கள் யானைப்பாகனுடைய அநுமதி கொண்டு புகவேண்டுமாபோலே, அவர்களைப் புருஷகாரமாகவாகிலும் கொள்ளப்பாருங்கோளென்று அருளிச்செய்கிறார். . 4.6.8
6.5. யார் எம்பெருமானைத் தொழ அதிகாரிகள்
அவன் நாம் கேட்காமலேயே எல்லோர்க்கும் அருளும் பகவனாகையினாலே நாம் எவரும் எவ்வளவு நீசர்களாக இருப்பினும் அவனை அணுகத்தடையில்லை. தம் தம் க்ருஹங்களிலே அவனுக்கு யாரும் ஆராதனம் செய்யலாம். 1.6.2
ஆழ்வார் மேலும் சொல்வதாவது எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருக்க தகுதியானவர்களே. ஜாதியைவிட பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம். - பெரிய திருவந்தாதி 79 . திருவாய்மொழி 3.7.9
மிகவும் நிஹீன்னர்களின் மேல் பாசம் வைத்துள்ளான் எம்பெருமான். ஆனால் மேலும் நீசனான ஒரு வ்யக்தியைத் தேடிப்பார்த்து, அப்படிப்பட்ட வ்யக்தி உலகத்தில் கிடைக்காமையாலே என்றைக்காவது அப்படிப்பட்டவொரு வ்யக்தி கிடைக்காமற் போகமாட்டானா என்கிற நசையினால் திருமலையில் வீற்றிருத்தலும் சயனித்தலும் இல்லாமல் நின்று கொண்டே தேடுகிறான் அவன். 3.3.4
மேடும் பள்ளமுமான நிலத்திலே பெருவெள்ளம் பெருகினால் மேடுபள்ளங்கள் நீங்கி ஸமநிலைமாக ஆகும்படியைக் காண்கிறோம். அவ்வண்ணமாகவே அருள் வெள்ளத்தால் எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடுபள்ளமும் நிரவப்படக்கூடியதே. 5.1.7
இவ்வுலகம் துன்பங்களுக்கு அந்தமில்லாமலிருக்கப் பெற்றிருப்பதுபோலே, மோக்ஷம் இன்பங்களுக்கு அந்தமில்லாதிருக்கப் பெற்றது. பக்தியற்றவர்களால் பெறலாகாத இம்மோக்ஷத்தையளிப்பபவன், மோக்ஷதானத்திற்கு நிர்வாஹகன் அவனே. 2.5.9
‘உங்களுடைய விரோதிகளை அவன் நிச்சேஷமாகப் போக்கவல்லவன்’ ‘அஸூர வர்க்கங்கள் தடுமாறி முடியும்படி அவற்றைத் தொலைத்தாப்போலே, உங்கள் விரோதிவர்க்கங்களை முடிப்பவனான அப்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களிலே ஈடுபடுங்கோள்’ 2.8.4
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று என்கிறபடியே அர்ச்சாவதாரஸ்தலத்திலே கிடந்தும் மிருந்தும் நின்றும்” நிலையையும் அநுஸநிதியுங்கோள். 2.8.7
தன்னிடம் ஆசையுடையாரெல்லாரையும் அடிமைப்படுத்திக்கொள்ளு மியல்வினன் அவன். இங்ஙனம் பரமபோக்யனான மனத்துக்கினிய எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக்கொண்டு போது அதாவது, அனுமானைப்போலே அவனுடைய வீர சரிதங்களைக் கொண்டு போதுபோக்கி ஸம்ஸார நிலத்திலிருக்கும்வரையில் கடல் போலே பெருகிச் செல்லுகின்ற நாள்களைத் தொலையுங்கோள் 1.6.7
இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புற இடைவிடாது எம்பெருமானுடைய திருக்குணங்களிலே அவகாஹியுங்கள்.2.7.10
தேவர்களுண்ணும் அமுதமானது இறப்பை நீக்கும். ஆனால் பகவத்விஷயமாகிற அமுதம் பிறப்பை நீக்கும். இதனை ஆரப்பருகி என் மாயப் பிறவி அறுங்கள். 1.7.3.
அவனுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபலவாயிருக்கும். யாவஜ்ஜீவம் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் பரம போக்யனாயிருக்கும் ஆரா அமுதன் அவன். ஸர்வகாலமும் அபூர்வ வஸ்துபோலே புதியனாயிருந்து தெவிட்டாதிருப்பான். . 2.5.6
6.6. எம்பெருமானிடம் நம் ப்ரார்த்தனை என்னவாக இருக்கவேணும்?
நாம் எம்பெருமானை ப்ரார்த்திக்க வேண்டியது “தனக்கேயாகவென்னைக் கொள்ளுமீதே” என்பதே. அதாவது,
1. பெருமானே,தேவரீர் என்னுள் சாச்வதமாக எழுந்தருளியிருக்கவேணும்,
2. ஸம்ஸாரமென்பது ஒரு பெருங்கடல், வல்லவனான நீயே கடத்தித் தரவேணும்’
3. நீர் அடியேனை தம் குற்றேவல்களை நிறைவேற்ற நியமித்துக் கொள்ள வேணும்,
4. நிலாத்தென்றல் சந்தனம் தண்ணீர் முதலிய பொருள்கள் போலத் தனக்கேயாக என்னைக் கொள்ளவேணும்.
5. இது தவிற அடியேன் ப்ரார்த்திப்பது ஒன்றுமில்லை. 2.9.4
No comments:
Post a Comment