Tuesday, February 8, 2011

7. நாம் நம் லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை?

முன் அத்யாயத்தில் நாம் நம் லக்ஷ்யம் அடைய வழி என்ன என்று விவரிக்கப்பட்டது. அங்கே நாம் செய்யவேண்டியவை யாவை, செய்யக்கூடாதவை யாவை என்றும் சொல்லப்பட்டன. இவைகளை நன்கு அறிந்து அவைகளை நன்கு அனுஷ்டித்து வாழ்பவர்கள் காலக்ரமத்தில் இகலோக வாழ்க்கை முடிந்து எம்பெருமானை நிச்சயம் அடைவர்.


ஆனால் ஸம்ஸாரிகளில் பெரும்பாலோர் பரமபதத்தில் வாத்ஸல்யம் ஸௌசீல்யம் முதலிய எண்ணில் பல்குணங்கள் உபயோகப்படாமே கிடந்ததனால் இந்நிலத்தில் வந்து தன்னுடைய ஒப்பற்ற வடிவழகைக் காட்டி அர்ச்சாவதாரத்திலே நமக்கு அருகிலேயே மேன்மையுடனும் தேஜஸ்ஸுடனும் நமக்கு உபகாரம் செய்வதற்காக அமையக்கிடக்கின்ற அவனை மறந்து உண்டியே உடையே என்று அவைகளிலேயே மூழ்கி, செய்யவேண்டியவைகளை செய்யாமலும், செய்யக் கூடாதவை களைச் செய்தும் வாழ்க்கை நடத்தும் மக்களே. இப்படிப்பட்ட கேடான வாழ்க்கையே அவர்கள் எம்பெருமானை அடைய தடை என்று சொல்லவும் வேண்டுமோ. 1.10.9

முன் அத்யாயங்களில் செய்யக் கூடாதவை என்று சொல்லப்பட்டவைகளுக்கும் மேலே, தேவதாந்தரங்களைத் தொழுதல் நாம் நம் லக்ஷ்யம் அடைய பெரும் தடையாகும். ஏனெனில்

7.1 ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தெய்வம். இறையவர் என்கிற வாசகம் ஸ்ரீமந்நாராயணனுக்கே ஒக்கும். மற்றெல்லோரும் தேவதைகளே.

7.2 மஹாபாரத யுத்தத்தில் அர்ஜூனனுக்குப் பாசுபதாஸ்த்ரம் வேண்டியிருந்தது; சிவபிரானை ஆராதித்து அதனைப் பெறவேணுமென்று அவன் முயற்சி செய்யப் போகையில், கண்ணபிரான், அவ்வாஜூனனை நோக்கி, ‘ருத்ரனிடத்தில் நீ செய்ய நினைத்திருக்கிற ஆராதனையை என் காலிலே செய்து வேண்டுவதை பெறுவாயாக’ என்று கட்டளையிட்டுத் தனது முழந்தாளைக் காட்ட, அங்கே அவன் சில புஷ்பங்களையிட்டு அர்ச்சிக்க, அன்று இரவு கனவிலே ருத்திரன் அந்த புஷ்பங்களைத் தனது தலையிலே அணிந்து கொண்டு வந்து காட்சி தந்து, அஸ்த்ர ப்ரதானம் பண்ணினதாகச் சொல்லப்படுகிற கதை இங்கு உணரத்தக்கது.

இப்படியாக தேவாதி தேவன் நம்பெருமானே என்பது மகாபாரதத்திலே முன்பே அர்ஜூனன் நிரூபித்து நிர்ணயித்த விஷயம்.

7.3 த்ரிவிக்ரமாவதாரத்தின் போது, பெருமானின் திருவடி ப்ரம்மலோகம் புக, பிரமன் பெருமானின் திருவடிக்கு பாதபூஜை செய்ய, ருத்ரன் எம்பெருமானுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை முடிமேல் தரித்து சிவனாயினான் என்பதும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது. 2,8,6

7.4 ருத்ரன் எம்பெருமானுடைய வலப்பக்கத்தை ஆச்ரயித்திருப்பவன். நான்முகக் கடவுளும் பெருமானின் திருநாபிக்கமலத்திலே பொருந்தியிருப்பவன். இதனால் இவர்களே பற்றியிருக்கும் பெருமான் பரதத்துவமான ஸ்ரீமந் நாராயணனே. 1.3.9

7.5 உலகத்தில் நடக்கிற ரக்ஷணத் தொழில் யாவும் எம்பெருமானுடையதே. அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய இதர தெய்வங்களைக்குறித்து அவரவர்கள் வழிபாடுகள் செய்து தாம் தாம் வேண்டிய பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான் எம்பெருமான் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலேதான். அவை, தானே அத்தெய்வங்களுக்கு ஆத்மாவாக / உள்ளீடாக இருந்து நடத்துகிற ரக்ஷணமேயன்றி அத்தெய்வங்களே ஸ்வதந்திரமாகச் செய்துவிடுகிற ரக்ஷணமன்று. ஆக அந்தத் தேவதைகளுக்கு ஸ்வதந்திரமாக ஒரு சக்தியுண்டென்று நினையாதீர்கள். 1.2.9

7.6 ஸம்பத்துக்களைச் சேமித்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களைத் தவிர்த்தொழிப்பதிலும் எம்பெருமானுக்கன்றி மற்றொருவற்கும் சக்தியில்லை.1.1.5

7.7 நாராயணனென்றும் நான்முகமெனன்றும் ருத்ரனென்று முள்ள மூன்று தேவர்களில் நாராயணனே படைப்பவன். மற்ற இருவரும் படைக்கப்படுமவர்கள்.

7.8 நாராயணனே ஸாத்விகன். மற்றோர் ராஜஸதாமஸர்கள். 1.3.6

7.9 நம் பாபங்களை க்ஷமித்து நம்மை உய்விக்கக்கூடியவன் நாராயணனே. மற்ற தேவதைகளினால் அது நடவாது. உலகங்களின் பாவங்களை அழியச்செய்வது கிடக்கட்டும் உலகுக்குத் தலைவனாக அபிமானிக்கப்படுகிற சிவபிரானுடைய பாவத்தையும் தொலைத்தவன் நாராயணனே. 2.2.2

சிவபிரானுடைய பல நாமங்களிலே, கபாலி என்பதும் ஒன்று. ஒரு காலத்திலே பரமசிவன் பிரமனுடைய சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொண்டு, அவன் ‘இதற்கு என்னசெய்வது‘ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்‘ என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி ப்ரார்த்திக்க, அப்பெருமான் அக்ஷயம் என்று பிக்ஷையிட உடனே அதுநிறைந்து கபாலம் கையைவிட்டு அகன்றது என்பது வரலாறு.

கொலையுண்டவன் பிரமன். கொலை செய்தவன் ருத்திரன். கொலையுண்டவனும் கொலை செய்தவனும் பரதெய்வமாக எப்படி இருக்கமுடியும். ப்ராயச்சித்தமாக பிச்சை எடுத்தவன் பரதெய்வமாக எப்படி இருக்கமுடியும்.


7.10 மார்கண்டேயன் நெடுநாள் வாழ்ந்துவருகையில், மஹாப்ரளயத்தைத் தான் காண வேணும் என்று ஆசைகொண்டு எம்பெருமானைப் போற்றிப் பிரார்த்தித்து அங்ஙனம் காணும்போது, மஹாப்ரளயத்தில் திருமாலொருவனை யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைதத்திருக்கக் காணாதவனாய் அப்பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங்கண்டஆன் என்பதும் புராணம்.

7.11 ஆக, எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே. 2.2.10


கேள்வி 1

ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்துவைத்தது ஏன்?

ஆழ்வார் சொல்லும் பதிலாவது, அவரவர்கள் பண்ணின புண்யபாபரூப கருமங்களுக்குத் தக்கபடியு பலன் கொடுப்பதென்ற ஒரு சாஸ்த்மரியாதை ஏற்பட்டிருக்கின்றது; முற்பிறவிகளில் புண்யம் செய்தோரை ஸ்ரீமந்நாராயண ஸமாச்ரயணம் செய்யும்படி பண்ணுகிறான். அஃதே போல் முற்பிறவிகளில் பாபம் செய்திருந்தவர்களுக்கு அவற்றின் பலனாக இப்பிறவியில் அவர்களை க்ஷுத்ரதேவதாபஜனம் பண்ணும்படி செய்கிறான் எம்பெருமான். 4.10.6

உலகில் பாபம் செய்பவர்களே அதிகமாகையினால், பாஹ்யமதங்களும் குத்ருஷ்டிமதங்களும் மலிந்து கிடக்கின்றன. உயிரைமீட்கும் ஓஷதிகள் மாருதிபோல்வார் பாடுபட்டுத் தேடிப் பிடித்துக் கொணரவேண்டும்படி ஸ்ரீவைஷ்ணவமதம் மிக விரளமாயிருக்கிறது. 5.2.4


கேள்வி 2

ஆனால் ஸ்ரீவைஷ்ணவர்களும் தேவதாந்தரங்களின் பெயரில் ஹோமங்கள் செய்கிறார்களே. ஏன்.

எப்படி என்றால், சக்கரவர்த்திக்கு ( இப்போது அரசாங்கத்துக்கு ) செலுத்தவேண்டிய கப்பம் / வரிகளை நாம் நேராகவே சக்ரவர்த்திக்குச் செலுத்துகிறோமோ? இல்லையே. ஆங்காங்குப் பல அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றார்களாதலால் அவர்களிடம் நாம் செலுத்துகிறோம்; ஆனாலும் அவை அவர்களுக்குச் சேருவனவல்ல.

இவ்வண்ணமாகவே ஸகலதேவதாநாயகனான எம்பெருமாள் தானும், நாம் செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்துவதற்காக இதர தேவதைகளை லோகமடங்கலும் பரப்பிவைத்துள்ளான். 5.2.8

அவர்கள் எம்பெருமானுக்கு சேரவேண்டியவைகளை நம்மிடமிருந்து வாஙகி, அவனிடத்தில் சேர்க்கின்றன. இக்காரணத்தாலேயே,

आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् सर्व देव नमस्कारः केशवं प्रतिगच्छति என்று சொல்கிறோம்.

ஆனால் எம்பெருமானை ஆராதனை செய்யும் விஷயத்தில் ஸாக்ஷாத்தாகவே அவனை ஆச்ரயித்தல் உசிதமாதலால் எம்பெருமானையே அநந்ய ப்ரயோஜநராய் ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள். 5.2.8

7.12 ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாகவுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம் பொருந்தும். தனது ஸங்கல்பத்தினாலே தேவஜாதி முதலான ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கின ஆச்சர்ய பூதனான ஸர்வேச்வரனையன்றி மூன்று லோகங்களையும் நிலைபெறுமாறு திருத்தித் தன் ஸங்கல்பத்திலே வைத்துக்கொண்டு காக்கும் ஸ்வபாவமுடையவர் வேறு யாரேனுமுளரோ? 2.2.8

7.13 ஆக, இந்திரனென்றும் சந்திரனென்றும் சிவனென்றும் பிரமனென்றும் காளியென்றும் ஐயனென்றும் அம்மனென்றும் ஆலையாது, ஸ்ரீமன் நாராயணனையே வழிபடுங்கள்.

7.14 சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திருவயிற்ளிலே வைத்து ரக்ஷரிக்கையாலே, வைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளும்படியான அகடிதகடநா ஸாமாத்தியத்தையுடையனான இவனே ஈச்வரன். 2.2.6, 2.2.7

7.15 உங்களுக்கு இவ்வுலகில் மறுபடியும் மறுபடியும் பிறவி வேண்டாமல் மோக்ஷம் தான் லக்ஷ்யம் என்றால் मोक्षमिच्छेत् जनार्दऩात् என்ற படி மோக்ஷம் தர வல்லவன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே.

7.16 ஆக தேவதாந்தர பஜனம் பண்ணுவது மோக்ஷம் போகாமல் இவ்வுதகத்திலேயே மறுபடியும் மறுபடியும் ஜன்மம் எடுத்து ‘பிள்ளைவேணும் குட்டி வேணும் சேலை வேணும் செல்வம் வேணும்’ என்ரு க்ஷுத்ர பலன்களை யெல்லாம் விரும்பி இவை கொடுப்பார் யாரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிந்து நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு முயல்வதேயன்றி வேறில்லை திரு ஆசிரியம் 6

7.17 ஆக, மற்ற இரு மூர்த்திகளிலேயுள்ள பசையை யறுத்து ஸ்ரீமன் நாராயணனையே ஆச்ரயித்தல் நலம். 1.3.7

No comments:

Post a Comment